தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம்!
கார்த்திகைப்பூவை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அடையாளமாகவே பார்க்கிறது. கார்த்திகைப்பூவை ஏன் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப் புலிகள் தேசியமலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதால் அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம். அந்தவகையில், அது தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளம் ஆகும் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் நேற்று வெள்ளிக்கிழமை (18.11.2022) ஆரம்பமாகியுள்ளது. கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமான இதன் தொடக்கவிழாவுக்குத் தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சங்கக்கவி கபிலர் தொடங்கி தாயகக்கவி புதுவை இரத்தினதுரை வரை கார்த்திகைப் பூவைப் பற்றிப்பாடாத புலவர்களே இல்லை. அந்த அளவுக்குத் தமிழ்மக்களின் வாழ்வியலில் கார்த்திகைப் பூவுக்குத் தனியானதொரு இடமுண்டு. இதனாலேயே, இந்தியாவில் தமிழ்நாடு தனது மாநில மலராகக் கார்த்திகைப்பூவைத் தெரிவுசெய்துள்ளது. கார்த்திகைப்பூவின் பிரகாசமான மஞ்சள், சிவப்பு வர்ணங்களும் மாவீரர்களை நினைவேந்தும் கார்த்திகையில் மலரும் அதன் பண்பும் மேலதிக காரணங்களாக அமைய, விடுதலைப்புலிகளும் கார்த்திகைப்பூவைத் தேசியமலராக அறிவித்தார்கள்.
விடுதலைப்புலிகள் இப்போது இல்லை என்பதற்காகக் கார்த்திகைப்பூ தமிழ்மக்களின் தேசிய அடையாளங்களில் ஒன்று என்ற அந்தஸ்தை ஒருபோதும் இழந்துவிடாது. அது யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுபோன்று ஆண்டுதோறும் கார்த்திகையில் மொட்டவிழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவை காரணமாகவே கார்த்திகை மாத மரநடுகை விழாக்களில் கார்த்திகைப்பூச்சூடுவதை நாம் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். இதன்மூலம் எமது சுற்றுச்சூழல் பற்றியும் வரலாறுபற்றியும் இளையதலைமுறைகளுக்கு நாம் எடுத்தியம்புகிறோம்.
கார்த்திகைப்பூவை அதிலுள்ள நஞ்சு காரணமாக நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். பூக்கும் தாவரங்கள் எல்லாமே ஏதோவொரு அளவில் ஏதோவொரு நஞ்சை எதிரிகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகக் கொண்டிருக்கின்றன. கார்த்திகைப்பூச்செடியிலுள்ள நஞ்சு மருந்தாகவும் பயன்படுகிறது. இதனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் கார்த்திகைப் பூச்செடி பயிரிடப்படுகிறது. பலகோடி ரூபாய்கள் அந்நியச்செலாவணியாகக் கிடைக்கிறது. நாமும் கார்த்திகைச்பூச்செடிகளை பெரும்பண்ணைகளாக அமைக்க முன்வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.