கனடாவிலிருந்து இலங்கை காவடி?
அண்மைக்காலமாக கனடாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி கல்லா கட்ட கடைவிரிக்கின்ற கும்பல்கள் தொடர்பில் தாயகத்து மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவிக்க தொடங்கியுள்ளது.
ஒருபுறம் ரணிலை சந்தித்து தாமே அரசியல் கைதிகளை விடுவித்ததாக ஒரு அணி ரீல் விட இன்னொருபுறம் கனடாவிலிருந்து திரும்பியுள்ள கும்பலொன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ,இரா.சம்பந்தன் என புதிய கடைகளை விரிக்க தொடங்கியுள்ளது.
அதேவேளை மற்றொரு கும்பலோ ஒருமித்த நாடாக இலங்கைக்குள் சகல மக் களுக்குமான தேசிய ஒற்றுமையின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய, கந்தையா பிளான் ஆவணம் நேற்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக செய்திகளை அவிழ்த்துவிட்டுள்ளது.
நீதி அமைச்சரும் அதிபர் சட்டத்தரணியுமான விஜேயதாச ராஜபக்சவிடம் கனேடிய தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதி இந்த ஆவணத்தை கையளித்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு என்றில்லாமல் தெற்கில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புதல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, மற்றும் தொழிற்சாலைகள், தலைமன்னார் முதல் இந்தியா வரையான கடல் வழிப்பாதை, வடக்கு, கிழக்கு மக்களது வாழ்வாதாரம், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், காணாமல் போனோர் பற்றிய நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளடங்கியதாக இத்திட்டத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி பஞ்சலிங்கம் கந்தையா கையளித்தார்.
இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்து கனடாவில் வாழும் கனேடிய தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் கந்தையா புதன்கிழமை நீதி அமைச்சா் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷவை நீதி அமைச்சில் சந்தித்தார்.
இதன்போதே,வடக்கு, கிழக்கு மக்களுக்குச் செய்ய வேண்டிய திட்டங்கள், செயற்பாடுகள், பற்றிய ‘கந்தையா பிளான்’ என்ற பெயரிலான இந்த ஆவணத்தை அமைச்சரிடம் கையளித்தார்.
பஞ்சலிங்கம் கந்தையா அங்கு ஊடக வியலாளா் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் தடைப்பட்டியலிலிருந்து கனேடியத் தமிழ் காங்கிரஸ் கட்சியை நீக்கியமைக்கும், சில அரசியல்கைதிகளை விடுதலை செய்தமைக்கும் நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1983இல், நாட்டில் நடைபெற்ற கலவரங்களால் அநேகமான தமிழ் மக்கள் உலக நாடுகள் முழுவதிலும் இடம் பெயர்ந்து வாழத் தொடங்கினர்.
அதில் நானும் யாழ்.காரைநகரிலிருந்து இடம்பெயா்ந்து கனடாவில் டொரோன்டோவில் வாழ்கிறேன். தற்பொழுது நாங்கள் எமது தாய் நாட்டை வந்தடைந்துள்ளோம். சில செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு செய்யும் படியும் அரசை வழியுறுத்தி வருவதாகவும் கந்தையா தெரிவித்தார் என சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.