சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி
தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை தமிழினம் தலைதாழ்த்தி வணங்கி, நிமிர்ந்து உரம் பெறுகின்ற நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது.
சுவிஸ் நாட்டில் தமிழரெல்லாம் எழுச்சிகொள்ளத்தொடங்கியதன் சான்றாக கடந்த 06.11.2022 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி பேர்ண் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இக்கவிதைப்போட்டியானது 45 போட்டியாளர்கள், தகைநிறை நடுவர்கள், அரங்கம் நிறைந்த உணர்வாளர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 10:00 மணிக்குத் தொடங்கிய இப்போட்டி நிகழ்வில் காலை 11:30 மணிவரை கவிதை எழுதுதலும் 13:00 மணிமுதல் கவிதை பாடும் போட்டியும் இடம்பெற்றது. கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு என நான்கு பிரிவுகளிலும் பங்குபற்றிய அனைத்துப் போட்டியாளர்களையும் அவர்களை ஊக்குவித்து வழிகாட்டிய அனைவரையும் இவ்வேளையில் பாராட்டுகின்றோம். எழுச்சிக்கவி 2022 விருதினைத் தனதாக்கிக்கொண்ட அதிமேற்பிரிவைச் சேர்ந்த சிவானந்தன் கஜேந்திரப்பிரசாத் அவர்களையும் அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்ற வெற்றியாளர்களையும்வாழ்த்துகிறோம்.
கவிதைப்போட்டியின் தொடர்ச்சியாகத் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்பெறும் பேச்சுப்போட்டிகள் எதிர்வரும் 19.11.2022 சனிக்கிழமை வலயமட்டமாக பேர்ண், சூரிச் மாநகரங்களிலும் 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடுதழுவிய வகையில் சூரிச் மாநகரிலும் நடைபெறவுள்ளது. தமிழீழத் தாயகம், தமிழீழத்தேசியத் தலைவர், மாவீரர் தியாகம், தமிழீழ வரலாறு எனத் தமிழினத்தின் வேர்களை அறிய வேண்டும், அவை சார்ந்த தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற உந்துதலோடு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் அனுசரணையுடன் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்துகின்ற இப்போட்டி நிகழ்வுகள் அதன் இலக்கை அடைய அனைவரது ஒத்துழைப்புகளையும் உரிமையுடன் வேண்டி நிற்கிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்