November 21, 2024

யாழில் நீரிழிவு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3000ற்கும் மேற்பட்டநீரிழிவு  நோயாளர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீரிழிவு நோயின்  தாக்கம் தொடர்பில் மிக அண்மைய  தரவுகளின் படி கொழும்பு மாவட்டத்தில் குறிப்பாக மேல் மாகாணத்தில்  30% மானவர்களுக்கு நீரிழிவு நோயின்  தாக்கம் காணப்படுகின்றது 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15% சதவீதமானவர்களுக்கு நீரிழிவுநோயின்  தாக்கம் காணப்படுகின்றது. நீரழிவு நோய் தொடர்பிலான ஆய்வுகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த கொவிட்  காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் அதாவது 20 – 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து செல்வதை  காணக்கூடியதாகவுள்ளது

யாழ். போதனா  வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பிரிவை எடுத்துக் கொண்டால் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3000ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் புதிதாக பதிந்திருக்கின்றார்கள். அதாவது நீரிழிவு நோயின் தாக்கமானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்வதனை   காணக்கூடியதாகவுள்ளது

 உலகளாவிய ரீதியில் அதிகரிப்பது போல  வளர்முக நாடுகளில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில்  எமது வடபகுதியில் இந்த நீரழிவு நோயின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகின்றது.

நவம்பர் மாதம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக இந்த உலக நீரிழிவு விழிப்புணர்வு வாரத்தில்  யாழ். மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.

மிக முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நீரிழிவு தாக்கமானது வடபகுதியில் அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது 

வடமாகாணத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் நீரழிவின் தாக்கமானது அதிகரித்து செல்வதை காண கூடியதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோய் தாக்கம் அதிகரித்துச் செல்வதற்கு மிக முக்கியமான காரணமாக அமைவது எமது வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள்.

குறிப்பாக சொல்லப் போனால் தவறான உணவு பழக்க வழக்கங்கள் அப்பியாசம் அற்ற வாழ்க்கை முறை என்பன மிக முக்கியமான காரணங்களாகவுள்ளது,

 இன்றைய காலகட்டத்தில் இந்த மேலைத்தேய உணவுகள் துரித உணவுகளில்  நாட்டம் அதிகரித்து செல்வதனால் நீரிழிவின் தாக்கமானது அதிகரித்துச் செல்வதை நாங்கள் காணக்கூடியதாகவுள்ளது அதேபோல உடல் அப்பியாசம் உடற்பயிற்சி செய்வது குறைவடைவது ஒரு மிக முக்கியமான காரணமாகும்

அதேபோல்  மன அழுத்தம் நித்திரை குறைவு போன்ற பல காரணங்களும் இதற்கு ஏதுவாக  அமைகின்றன

ஆகவே  நீரிழிவு விழிப்புணர்வு மாதத்தில் மக்களுக்கு நீரிழிவு நோய் என்றால் என்ன என்பது  தொடர்பான விழிப்புணர்வு அவசியமாகும் 

நீரிழிவு நோய்  ஏற்படும்போது சில அறிகுறிகள் ஏற்படும் அந்த அறிகுறிகளை நாங்கள் அடையாளம் கண்டு உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது குறித்த நோயிலிருந்து  தப்பித்துக் கொள்ள முடியும்.

இல்லாவிட்டால் அந்த நீரழிவு நோயானது ஒரு பாரிய நோயாகும். உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோயாகும்.

 எனவே வட பகுதியில் உள்ள மக்கள் இந்த நீரிழிவு நோய் தொடர்பில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார். 

செய்தி: பு.கஜிந்தன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert