பேரணியை கண்காணிப்பதற்காக ஆணைக்குழு!
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று(02) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன
இன்றைய பேரணியை கண்காணிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸாரை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பே நாட்டின் உயர்ந்த சட்டம் என்பதை பொலிஸாருக்கு ஞாபகப்படுத்துவதாக கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்த தருணத்தில் ஏதேனும் வகையில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அது நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர மக்கள் சபை உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வெகுசன அமைப்புகளும் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன
கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டு அதன் பின்னர் பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.