காணி அபகரிப்புக்கான எதிரான போராட்டத்திற்கு அழைப்பு
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளையதினம் இடம்பெறவுள்ள வலி. வடக்கு மக்களின் காணி அபகரிப்புக்கெதிரான கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில், இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள்,
வலி. வடக்கு மக்களின் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான அழைப்பை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் நேற்றையதினம் விடுவித்து இருந்தார்கள். அந்த வகையிலே இங்கு நடைபெறுகின்ற காணி அபகரிப்பு எங்கள் தாயகத்தை கூறு போடுகின்ற நிகழ்வுக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வழிவடக்கிலே காணிகளை அபகரித்து பொதுமக்களுடைய காணிகளை அபகரித்து அரச இயந்திரங்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிற அந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையிலே யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய பல்கலைக்கழகங்கள வளாகங்கள் மற்றும் பீடங்களில் உள்ள தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கு மாணவர் ஒன்றியத்தை அங்குரார்ப்பணம் செய்திருந்தார்கள்.
அந்த விடயத்தை நாங்கள் சிவில் அமைப்புகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுடைய இளைய சமுதாய இளைஞர்களுடைய தமிழ் தேசிய போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது . அந்த முயற்சியில் முதல் அடிக்கல் ஆக இதை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயம்.
அந்த அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து நாளைய தினம் இப் போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் அழைப்பை விடுத்திருப்பதும் இன்னும் வரவேற்கத்தக்க விடயம். அதுமட்டுமல்லாமல் கிழக்கிலிருந்தும் இப் போராட்டத்திற்கு 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றார்கள் இது எமது தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டக் கூடியதாக உள்ளது.
மேலும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துள்ள அனைத்து சிவில் அமைப்புகளும் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதற்காக தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்த வகையிலே யாழ். மாவட்டத்தில் 3427 ஏக்கர் நிலம் அரசினுடைய ராணுவத்தினுடைய ஏனைய படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக வழிவடக்கில் 2467 ஏக்கர் நிலம் இந்த கட்டுப்பாட்டில் இருக்கிறத. இவை அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் காணி அமைச்சினுடைய மேலதிக செயலாளர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலே 1674 ஏக்கர் நிலத்தை சுவிகரிப்பதற்கு உத்தரவு இட்டு இருக்கின்றார் . இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
எங்கள் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இலங்கை அரசினுடைய சிங்கள் பௌத்த பேரினவாத அரசு எங்களுடைய நிலத்தை பயன்படுத்தி தோட்டம் செய்வதாக இருக்கட்டும் எங்களுடைய கடல் வளத்தை சுரண்டி அவர்களின் பொருளாதாரத்தை வளர்க்கின்றனர். இது எமது நிலம் இதுவே எமது உரிமை என்று நாளைய தினம் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.
மேலும் தெல்லிப்பளை சந்தையில் நடக்கின்ற போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும். காலநிலைக்கு அஞ்ச மாட்டோம். இதன் மூலம் தமிழ் தேசியத்தின் மேல் உள்ள பற்றை வழி காட்டவே வேண்டும் இதில் எந்த கட்சி தலையிலும் இல்லாமல் தமிழ் தேசியத்திற்காக அனைவரும் இப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் யாழ் பல்கலைக்கழக மாணவருக்கு ஆதரவு வழங்கி இருக்கின்றோம் – என தெரிவித்தார்
செய்தி:பு.கஜிந்தன்