இரட்டைக் குடியுரிமை:கதிரை இழப்பது யார்!
இலங்கையில் இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளை இறுதி செய்யவுள்ளதாக, குடிவரவு -குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இந்த திணைக்களம் கடந்த வாரம் விசேட விசாரணையை ஆரம்பித்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிறந்த திகதி, பெயர் மற்றும் தேசிய அடையாள இலக்கம் அடங்கிய நாடாளுமன்ற ஆவணத்தின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்பட்டதாக, திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆவணமொன்றை நாடாளுமன்றம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்ததாகவும், அவர் இன்றைய தினம் நாடு திரும்பியதாகவும், கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆவணத்தில் கையொப்பமிட்ட பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என அந்த திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கமைய, இரட்டை குடியுரிமை கொண்ட எவரும் நாடாளுமன்றில் உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிவது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.