November 24, 2024

யேர்மன் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா

ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி குறித்து யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளரை சந்தித்து பேசினார் திரு கஜேந்திரன் செல்வராஜா

யேர்மன் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளருடனும், இலங்கைக்கான விசேட பணிப்பாளருடனும், யேர்மன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதியுடனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்றைய தினம் பேர்லின் தலைநகரத்தில் இடம்பெற்றுள்ளது.

ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொண்ட பின்னர் திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்கள் யேர்மனிக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஈழத்தமிழர்கள் அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும், இவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐநாவில் பல்வேறு விதமான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் மக்கள் ஒருபோதும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இனவழிப்பிற்கு பன்னாட்டு சுயாதீன விசாரணை மட்டுமே பரிகார நீதியை நிலைநாட்டும் என்ற கருத்து திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை என்ற பல பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டது.

இந்த கலந்துரையாடல் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையால் ஒருங்கிணைக்கப்பட்டு திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்களுடன் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி ப. அஞ்சனா மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீள வேண்டிய தேவை உள்ளது.அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை முன்வைக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்தோடு ஜெனீவா தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட 13 ம் திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் எக்காலத்திலும் அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கலந்துகொண்ட அனைத்து தமிழ் அமைப்புகளும் தெவித்துள்ளார்கள்.

இச் சந்திப்பை தொடர்ந்து ஆளும்கட்சிகளில் ஒன்றான பசுமைக் கட்சியின் கொள்கைவகுப்பாளருடனும் முக்கிய சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு பேசப்பட்ட விடயங்களில் ஈழத்தமிழர்கள் சார்ந்து சில நிலைப்பாடுகளை உணரமுடிந்தது என்பதையும் அத்தோடு அவர்களுடன் ஒரு தொடர்ச்சியான தகவல்பரிமாற்றத்தை முன்னெடுக்கவும் அவர்களுடனான தொடர்பை பேணுவதற்கான தளத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் மாலை 6 மணிக்கு திரு கஜேந்திரன் செல்வராஜா அவர்களை பேர்லின் நகர உணர்வாளர்கள் சந்தித்து வரவேற்ற தருணத்தில் வெளிவிவகார அமைச்சுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாகவும் அத்தோடு தாயக மக்களின் நிலைமையையும் , இன்று தமிழ் இனத்திற்கான விடுதலையை நோக்கிய அரசியலுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான ஆபத்தையும் , விடுதலையை நோக்கிய பயணத்தில் புலம்பெயர் மக்களின் வகிபாகத்தையும் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert