போர்க்குற்றவாளிகள் மீதான தடைகள் குறித்து ஆராய்கிறது பிரித்தானியா
முப்படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகவும், ஏனைய இராணுவ வீரர்களுக்கு எதிராகவும் தடைகளை விதிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் ஜெஸி நோர்மனை மேற்கோள்காட்டி ‚த ஐலன்ட்‘ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் உள்ளடங்கலாக இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை தமது அரசாங்கம் மிக உன்னிப்பாக மதிப்பாய்வு செய்துவருவதாகவும், அதன்படி ‚தடைவிதிப்பு‘ உள்ளடங்கலாகத் தம்வசமுள்ள இராஜதந்திர உத்திகளை எவ்வாறு பிரயோகிக்கமுடியும் என்பது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சர் ஜெஸி நோர்மன் தெரிவித்திருப்பதாக அப்பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திறைசேரியின் நிதிச்செயலாளராகப் பதவிவகித்த நோர்மன், பிரிட்டன் பிரதமராக எலிசபெத் ட்ரஸ் பதவியேற்றுக்கொண்டதை அடுத்து வெற்றிடமான வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் பதவிக்குக் கடந்த செப்டெம்பர் 7 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஏனைய இராணுவத்தினருக்கு எதிராகத் தடைகளை விதித்தல் தொடர்பான அண்மைய மதிப்பீடு குறித்து தொழிற்கட்சி உறுப்பினர் பெத் வின்டரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜெஸி நோர்மன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளாரென ‚த ஐலன்ட்‘ பத்திரிகைச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.