ஜப்பான் சென்றார் ரணில்: பதில் அமைச்சர்கள் நியமித்தார்!!
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
முதலில் ஜப்பானுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, அங்கு நாளை நடைபெறவுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜப்பானுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளார்.
அதன் பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளார்.
பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதி இலங்கை திரும்பவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் இல்லாத காலத்தில் கையாளும் வகையில் தனது பணிப்புரைக்கு உட்பட்ட அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்துள்ளார்.
செயல் அமைச்சர்கள் விவரம் வருமாறு:
இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார – பதில் பாதுகாப்பு அமைச்சர்
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் – தொழில்நுட்ப அமைச்சர்
மாநில அமைச்சர் அனுபா பாஸ்குவல் – பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றின் செயல் அமைச்சர்.