November 21, 2024

குருந்தூர்மலை:அங்கயனும் கண்டித்தார்!

முல்லைத்தீவு – குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்படுவது நாட்டின் ஜனநாயகத் தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 

ஓர் திணைக்களத்தின் செயற்பாடு இரண்டு மதங்களுக்கு இடையே குரோதங்களை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடு இனங்களுக்கிடையே,மதங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்துவதாக காணப்படுகிறது. 

மதித்து நடக்க வேண்டிய நீதிமன்றக் கட்டளைகளை புறந்தள்ளுவதென்பது நாட்டின் ஜனநாயகத்தை மீறும் செயற்பாடு. 

நீதிமன்றக் கட்டளைகளை பேணுபவர்களாக பொலிஸார் இருக்க வேண்டுமே தவிர-தவறுகளை கண்டு கிளர்ந்தெழும் மக்களை அச்சுறுத்துவதாக பொலிஸாரின் செயற்பாடு அமையக் கூடாது. 

அதேபோன்று தமிழர்களின் பூர்வீக நிலமாகவும், உலக இந்துக்களின் புனித பூமியாகவும் திகழும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமான திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயச்சூழலில் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்புகளும் எமது மக்களை பெரிதும் பாதித்துள்ளது. 

தொல்லியல் திணைக்களம் இனங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவே ஓர் ஜனநாயக நாட்டிற்கும் – அதன் ஆட்சியாளர்களுக்கும் அழகு என்பதை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert