சனத் நிஷாந்த நீதிமன்றில்!
இரண்டு சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்களை தாக்கியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சனத் நிஷாந்த சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இன்னமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகஸ்ட் 23, 2022 அன்று, SLPP கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை குறித்து, குறிப்பாக நீதித்துறை அதிகாரிகள் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கருத்துக்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர்கள் மேலும் தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் 105(3) சரத்தின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது