November 21, 2024

இடைக்கால வரவு – செலவுத்திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின் செலவுகளுக்காக நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (2) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

கடந்த புதன்கிழமை முதல் இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுதிட்ட உரை மீதான விவாதத்தின் இறுதிநாள் இன்று இடம்பெற்றது.

காலை 9.30 மணி முதல் இடம்பெற்ற இந்த விவாதத்தில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாத விவாததில் ஈடுபட்ட நிலையில், விவாதம் மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தபோது, சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை சபை அனுமதிக்கின்றதா என கேட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க வாக்கெடுப்பு கோரினார்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் கோரம் மணியை ஒலிக்கவிடுமாறு அறிவித்து வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். வாக்கெடுப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றது.

அதன் பிரகாரம் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் பதியப்பட்டன. 43 பேர் வாக்களிப்பில் இருந்து தவிர்ந்துகொண்டனர்.

அதற்கமைய 115 மேலதிக வாக்குகளால் இடைக்கால வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

ஐ.ம.ச., விமல், மற்றும் டலஸ் அணி வாக்களிப்பை தவிர்த்தது

வாக்கெடுப்பின்போது ஐக்கிய மக்கள் சக்தி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் விமல் அணி மற்றும் பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து ஆளும் தரப்புக்கு மாறிய டலஸ் அழக்கப்பெரும தலைமையிலான குழுவினர் சபையில் இருந்தும் வாக்களிப்பில் இருந்து தவிர்ந்துகொண்டனர். அத்துடன் எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் குமார வெல்கம வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பு

இன்றைய தினம் விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தபோதும், வாக்கெடுப்பில்  எவரும் பங்கேற்கவில்லை. 

விக்கினேஸ்வரன் எம்.பியும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. தமிழர் தரப்பில் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் எதிராக வாக்களித்திருந்தனர். அத்துடன் தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert