சீனா மீது பாயும் பல்கலை மாணவர்கள்!
தமிழ் சமூகம் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கைக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கருத்து வெளியிட்டமையை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஊடக அறிக்கையினை வாசித்த மாணவ பிரதிநிதிகள் சபையின் அறிக்கையின் பிரகாரம், இனவழிப்பு யுத்தத்தின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களும் சிறுமிகளும் படையினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
29 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார அலுவலகத்தின் தகவலின் படி, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் தமிழர் பகுதிகளில் ஏராளமான துன்பங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இலட்சக்கணக்கான படையினர் எமது தாயக பூமியை ஆக்கிரமித்து நிற்கின்றனர்.
யுத்தத்தின் பின்னர் எமது பாரம்பரிய தாயகத்தில் எம்மை சிறுபான்மை ஆக்குவதற்காக சிங்கள பௌத்த மக்களை குடியேற்றுவதற்கு எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது.
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நீதியைப் பெறுவதே எமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்தும் கடிதத்தை தமிழர்கள் ஐக்கியமாக அனுப்பிய அதே நாளில், சீனத் தூதுவர்; இலங்கைக்கு ஆதரவாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை தந்துள்ளதாக மாணவ ஒன்றியப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.