நியாயம் கிடைக்கவில்லை: ஐ.நாவிடம் முறையீடு!
கடந்த மே 09 அன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்த போது எரிக்கப்பட்ட பேரூந்துகளுக்கான காப்பீட்டுத் தொகையோ இழப்பீடுகளோ கிடைக்கவில்லை என்று இலங்கையின் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்டுள்ளனர்.
இந்த வன்முறையின்போது 50 பேரூந்துகள் வரை எரியூட்டப்பட்டன
இது தொடர்பில் காவல்துறையிடம் முறையிட்டபோதும் நியாயம் கிடைக்கவில்லை.
இதனையடுத்தே சர்வதேசத்திடம் முறையிடவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் நீதி கேட்டு முறைப்படி முறைப்பாடு செய்துள்ளதாக விஜேரத்ன கூறியுள்ளார்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்தமே 09 அன்று இலங்கை முழுவதும் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டில் வன்முறைகள் ஏற்பட்டன.
இதன்போது தாக்குதல் நடத்தியவர்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேரூந்துகள் ஆத்திரமடைந்த குழுவினரால் தீயூட்டப்பட்டன.