திருக்கேதீஸ்வரம்:மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும்!
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் பொதியிடப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மனித எச்சங்களை கையளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை மீண்டும் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், அதன் பின்னர் நீதவான் முன்னிலையில் அவற்றை பிரித்தெடுத்து, மாதிரிகளை பகுப்பாய்விற்கு உட்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மன்னார் நீதவான் இன்று கட்டளை பிறப்பித்திருந்தார்.
இதனிடையே மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் வீதியோரத்தில் நீர் விநியோகத்திற்கான குழாய்களைப் பதிப்பதற்காக நிலத்தைத் தோண்டிய பணியாளர்கள், இரண்டு மனித எலும்புக்கூட்டு எச்சங்களைக் கண்டு காவல்துறையினருக்குத் தெரிவித்ததையடுத்து, அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன
அதில் சுமார் 80 பேருடைய மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.