இன்று வருகிறார்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு
பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைவகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு இன்று புதன்கிழமை (24) இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
இலங்கையை வந்தடையவுள்ள பீற்றர் ப்ரீயெர் மற்றும் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு இம்மாதம் 31 ஆம் திகதி வரையான 8 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருந்து பலகட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி செயற்திட்டம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான முதற்கட்ட நகர்வாக இணக்கப்பாட்டை எட்டுவதை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இந்த வருகையின் பிரதான நோக்கமாகும்.
அதேவேளை இலங்கையின் பொதுக்கடன்கள் ஸ்திரமற்ற நிலையிலிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதியம், இருப்பினும் பொருளாதார நிதியுதவி செயற்திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை அனுமதியளிக்க வேண்டுமெனில் அதற்கு இலங்கையின் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை மீளுறுதிப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை கடன்வழங்குனர்கள் வழங்கவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கைக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதிய உயர்மட்டக்குழு பொருளாதாரத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.