ஜநாவிற்கு கனதியான மகஜர் தயார்
இனப்படுகொலையுடன் தொடர்புடைய கோட்டாபய ராஜபக்ஷவையும், அதனுடன் சம்பந்தப்பட்ட, அரசில் உள்ளவர்களையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைத்து, மகஜர் ஒன்றை, மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று, வவுனியா நகர சபை மண்டபத்தில், வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில், கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை அழைத்து இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தன் நடராஜா, இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஜெனீவா கூட்ட தொடருக்கு முன்பாக அனைவரினதும் ஏகோபித்த கருத்தாக ஜெனீவா கூட்டு நாடுகளுக்கு அனுப்புவதற்கு மகஜரில் கையொப்பமிட்டு அனுப்புவதற்காக இந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தோம்.
கடந்த வருடம் ஜனவரி 15 ம் திகதி அனைவரும் ஒற்றுமையாக ஒரு குரலில் கோரிக்கைகளை முன்வைத்தது போல் இந்த தடவையும் இதை செய்வதற்கு நாம் முன்னெடுத்திருக்கின்றோம்.அதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கின்றோம்.
இதற்கு ஆதரவாக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. நாங்கள் எழுதிய மகஜருக்கு ஆதரவாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனைய கட்சிகளும் வெளிபடையாக கூறாவிட்டாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தான் வந்த பிரதிநிதிகள் கூறியிருக்கிக்கின்றார்கள். அதை தமது தலமை பீடங்களுடன் கதைத்து தான் தமது இறுதி முடிவை அறிவிப்பார்கள்.
தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவோ, ஏதோ மிகுதி விடயத்தை கொண்டு சென்று, நாளை நமக்கு கால அவகாசம் போதாமல் இருப்பதால், நாங்கள் இன்றோ, நாளையோ, அவர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டாவது அவர்களின் அனுமதியை மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ, தொலைபேசியில் குறும் செய்தி மூலமாகவோ அதனை பெற்று நாங்கள் கூடிய விரைவில் அதை அனுப்பி வைப்போம். ஏனென்றால் காலம் போதியதாக இல்லை. இந்த அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து அந்த மகஜரை அனுப்புவதாக உள்ளோம்.
அதைவிட இன்னொரு தயார் செய்து வைத்துள்ளோம்.
அது சமூக அமைப்புகளும், பாதிக்கப்பட்ட தரப்பினருமாக சேர்ந்து அனுப்புவதற்காக அதிலே நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு, கையகப்படுத்தப்பட்ட நிலம், அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், விகாரைகளை அகற்றல் என ஆறுவிடயங்களை உள்ளடக்கி இருக்கின்றோம் என தெரிவித்தார்.