ஆர்ப்பாட்டம்:தயார் நிலையில் கொழும்பு!
கொழும்பு நகரில் இன்று (09.08.2022) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், கலவர தடுப்பு பிரிவு நீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகைக் குழுக்களை விழிப்புடன் வைத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பை பாதுகாப்பதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொதுமக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தினுள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கோட்டை இலங்கை வங்கி மாவத்தைக்கு அருகில் சட்டவிரோதமாக ஒன்றுகூடி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூலை 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் போது கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே நேற்று (08) பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்குள் பொதுமக்கள் போராட்டத்தின் போது பலவந்தமாக நுழைந்த மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஜூலை 09ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 03 பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் நேற்று பம்பலப்பிட்டி அடிமலே வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.