புனாணை மயிலந்தனை படுகொலை இடம்பெற்று 30 ஆம் ஆண்டு நினைவு நாள்

மட்டக்களப்பு மாவட்டம், புனாணை மயிலந்தனைப் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு ஆவணி 9 ஆம் நாள் 39 தமிழ் மக்கள் சிங்கள படைகளினால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டு 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்.
1992, ஆவணி 8 ஆம் நாள் அன்று வட தமிழீழம் யாழ்ப்பாண மாவட்டம், அராலித்துறையில் யாழ்ப்பாண மாவட்ட சிறீலங்கா படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்ட அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆவணி 9 ஆம் நாள் சிறீலங்காப் படையினர் மயிலந்தனைத் தாக்குதலை நடத்தினர்.
40க்கும் மேற்பட்ட நேரடிச் சாட்சியத்தின் படி, சிறீலங்காப் படையினர் துப்பாக்கிகள், கத்திகள், மற்றும் கோடாலிகள் கொண்டு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலரைத் தாக்கிக் கொன்றனர். ஒரு வயதுக் குழந்தை ஒன்றும் கொல்லப்பட்டது. 35 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் நால்வர் மருத்துவமனையில் இறந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர்.
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் அடையால அணிவகுப்பு இடம்பெற்று, 24 சிங்கள பேரினவாத படையினர் உயிர் தப்பியோரினால் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 18 படையினர் தகுந்த ஆதாரம் இருந்து குற்றம் சாட்டப்பட்ட நிரைலயில் விடுதலை செய்யப்பட்டனர். மனித உரிமைக் குழுக்களும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் இது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புனாணை படை முகாமைச் சேர்ந்த சிறீலங்கா படையினரே இப்படுகொலைகளை நிகழ்த்தியதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும் கொழும்பு நீதிமன்றம் ஒன்றில் சான்றாயர் குழு ஒன்று இவர்கள் அனைவரையும் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்தது. இறந்தவர்களின் உறவினர்கள் சார்பில் மேன்முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயகப்பகுதியில் சிங்கள படைகளினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்புக்கு சிறீலங்காவில் காணப்படும் நீதித்துறை மூலம் எவ்வித நீதி நியாயமும் வழங்கப்படவில்லை என்பது வரலாற்று உண்மை. எனவே, தாயகப்பகுதியில் 1956களில் இருந்து சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டுவருகின்றனர்.