November 24, 2024

கோத்தா பணத்தை சேர்ப்பிக்க காத்திருந்தவர்கள் சிக்கலில்!

தூயவன் Saturday, August 06, 2022இலங்கை

கோத்தபாய ஜனாதிபதி மாளிகையில் கைவிட்டு ஓடிய பணத்தை அவரிடம் சேரப்பிக்க காத்திருந்த காவல்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட 17 மில்லியன் ரூபாவை பொலிஸார் நீதிமன்றில் கையளிக்க மேற்கொண்ட நடவடிக்கை, ஒழுக்கமற்ற செயல் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்படுள்ளது.

எனவே சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ்.விக்ரமசிங்க, கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று அறிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் அடுத்த நாள், குறித்த பணத்தை ஒப்படைக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிவித்ததாக, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமசிங்க நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எனினும் பொலிஸார் உரிய செயல்பாடுகளை மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து பணத்தை கையளிப்பதற்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பான தொலைபேசி அழைப்பு ஒலிநாடாக்கள் மற்றும் நிகழ்நேர உரையாடல்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் வழங்குமாறு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் இரண்டு தொலைபேசி நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வைத்திருந்த பதிவுகளும் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பணம் கையளிக்கப்பட்டது முதல் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும் வரை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலேயே பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை சமர்ப்பித்ததாக விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert