யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்!
ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருக்கின்றமைக்கு யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அவர் பொதுச்செயலாளராக இருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்கு 1997 இலிருந்து தொடர்பு உண்டு. ஆனால் மேதினத்துக்கு மேதினம் கூடிக் கலைந்து விடும் உறவாக மட்டுமன்றி -யாழ்ப்பாண மட்ட தொடர்பாக மட்டுமன்றி -எமது நட்புறவு „உனக்கு அடித்தால் எனக்கு வலிக்கும்“ ஆத்மார்த்தமான தொடர்பாக மாறியது தோழரின் காலத்தில் தான். பகுதி நேர தொழிற்சங்க வாதியாகவோ பகட்டான தொழிற்சங்க வாதியாகவோ அன்றி முற்றுமுழுதான அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வரும் நூறு சதவீத தொழிற்சங்க போராளி.
இலங்கை ஆசிரியர் சங்கம் ஸ்டாலினின் காலத்துக்கு முன்பே தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரித்திருந்தது.. தோழர் ஸ்டாலின் இந்த நிலைப்பாட்டை தெளிவாக விளங்கித் தொடர்ந்தமை நாட்டை பிரிப்பதற்காக அல்ல. சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதனுடாகத் தான் பிரிவினை அபாயத்தை தவிர்க்க முடியுமென உறுதியாக நம்பினார் என்றே கருதுகிறோம்.
சிங்கள தமிழ் தொழிலாளர்களிடையே இவர் ஒரு வலிமையான இணைப்புப் பாலம். ஆக மொத்தத்தில் இனங்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்தி வலிமை மிக்க நாட்டை கட்டியெழுப்ப விரும்பும் தலைவர்களுக்கு. உறுதுணையாக விளக்கக் கூடிய சமுகப் போராளி. இவருக்கு கேடு நினைப்பவர்கள் முழு இலங்கைத் தீவின் நலனுக்கு எதிரானவர்களாகத் தான் இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது