முகநூலில் அடைக்கலமாகும் கட்சிகள்!
தமிழர் தாயகத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பதில் தேசிய நிலைப்பாட்டை முன்னிறுத்தும் தமிழ் கட்சிகள் கையறு நிலையினை அடைந்துள்ளன.
வெறும் நினைவு கூரல்களை ஒருசிலருடன் முன்னெடுத்து அதனை ஆவணப்படுத்தும் முயற்சியில் அவை ஈடுபட்டுள்ள நிலையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட சிறிய மட்ட அமைப்புக்கள் போராட்ட களங்களை திறந்துவருகின்றன
அவ்வகையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி, தொடர்ச்சியாக 100 நாட்கள் நடாத்தப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த வைரவர் ஆலயத்திற்கு முன்பதாக இன்று செவ்வாய்கிழமை போராட்டம் இடம்பெற்றிருந்தது,
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனிடையே சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பைக் கோரி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.