November 21, 2024

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் போராட்டம்

காலி முகத்திடல் அமைதிவழிப் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து இன்றைய தினம் (29) காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் மன்னாரில் இடம் பெற்றது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் அமைதிவழிப் போராட்டக் காரர்களையும், ஊடகவியலாளரையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் தாக்குவதை நிறுத்துமாறு இலங்கை அரசை கோருவதாகவும் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இளைஞர், யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களாகிய நாம், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக் காரர்களையும் உடன் விடுவிக்குமாறு நாம் அரசை வேண்டுகிறோம்.

இலங்கைத் தீவின் அதிகாரங்களற்ற சாதாரண பொதுமக்கள் ஜனநாயகமான மக்கள் போராட்டத்தின் மூலம் சர்வாதிகார ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இலங்கைத் தீவின் மக்கள் எனும் வகையில் நாம் பெருமிதமடைகிறோம்.

தமிழின அழிப்புக்கும், போர்க் குற்றங்களுக்கும் பொறுப்பான பேரினவாதப் பாதுகாவலர்களான ராஜபக்ஷர்களை மண்டியிடச் செய்த மக்கள் போராட்டத்துக்கு தலை வணங்குகிறோம்.முழு நாடும் ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்காக காத்திருந்தது.

எனினும், மக்கள் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அதிகார மாற்றத்தின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்கள் அதே மக்களுக்கு எதிராக திரும்பி அந்த மக்களின் குரலை நசுக்குவது சந்தர்ப்ப வாதமாகும்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வன்முறையான ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள் நாட்டை மீளவும் ஒரு இருண்ட யுகத்துக்கு கொண்டு செல்லும் என நாம் அஞ்சுகிறோம்.

எனவே, மக்களுக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் மீறுதலை உடன் நிறுத்துமாறும், ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் நாம் இலங்கை அரசைக் கோருகிறோம் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert