டலஸ் – சஜித் கூட்டுத்தோல்வி “கோ ஹோம்“ பட்டியலுக்குள் ஜி.எல்.பீரிசையும் சுமந்திரனையும் விரைந்து இழுத்துச் செல்கிறது! பனங்காட்டான்
ரணிலின் வெற்றி என்பது டலஸ்-சஜித் கூட்டின் தோல்வி என்பதைவிட, பெரமுனவின் ஜி.எல்.பீரிசுக்கும், கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் கிடைத்த பெரும் தோல்வி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களின் முகத்தில் அழிக்க முடியாத கரியைப் பூசியுள்ளனர். தங்களை ஷகிங் மேக்கர்|கள் என நினைத்த இவர்கள் இருவரும் அடுத்த தேர்தலுக்கு முன்னரேயே அவர்களின் மக்களால் ஷகோ ஹோம்| பட்டியலுக்குள் இணைக்கப்படுவார்களானால் ஆச்சரியப்பட நேராது.
அதிர்ஸ்டம் வருமென்றால் அது கூரையைப் பிய்த்துக் கொண்டும் வருமென்பர். இதுதான் இப்போது இலங்கை அரசியலில் நடந்துள்ளது.
ராசியில்லாத ராஜாவாக இதுவரை இருந்தவர், கடந்த பொதுத் தேர்தலில் யாவையும் இழந்து பூச்சியத்தின் மன்னனாக மாண்பேற்றப்பட்டவர், நாற்பத்தைந்து வருட கால அரசியல் அனுபவத்தை ஓர் இரவோடு புதைத்தவர் – இப்போது அந்தத் தீவின் எட்டாவது ஜனாதிபதியாகியுள்ளார். அகில உலக வரலாற்றில் புதுமையான புதினமாக இது பதியப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத பெருமையை பெற்றுள்ளார் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசியல் வாரிசான ரணில் விக்கிரமசிங்க.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மாதத்தில் கோதபாய அணிக்கு எதிரான போராட்டம், ராஜபக்ச சகோதரர்களையும் அவர்களின் புதல்வர்களையும் அரச உயர் பதவிகளிலிருந்து படிப்படியாக அகற்றி, இறுதியில் கறுப்பு யூலை நினைவேந்தலான இந்த மாதத்தில் கோதாவையும் நாட்டைவிட்டு ஓடச் செய்தது.
ராஜபக்சக்களுக்கு எதிரான அவர்களது மக்களின் எழுச்சி, புரட்சிகரமான ஒரு முடிவை அரசியல் சதுரங்கத்தில் ஏற்படுத்தியமைக்கு, போராட்டக்காரர்களின் இலக்கின்மையே காரணமென்று கூறலாம்.
கோதா கோ ஹோம் கோசத்துடன் இதனை ஆரம்பித்தவர்கள், தங்கள் போராட்டம் சிலவேளை வெற்றி பெறாது என்று எண்ணியிருக்கலாம் அல்லது இவ்வளவு விரைவாக ராஜபக்சக்கள் ஓடுவார்கள் என்றும் நினைக்காதிருந்திருக்கலாம். அதனால்தான், அதன் பின்னர் என்ன செய்வது என்று திட்டமிடாது போனதற்குக் காரணமாகவும் அமைந்திருக்கலாம். எந்த ஒரு செயற்பாட்டுக்கும் திட்டமிடலும் திட்டச்செயற்படுத்தலும் கரங்கோர்த்திருக்க வேண்டும். ஆனால் காலிமுகத் திடல் அதில் தவறி விட்டது.
முன்னர் ராணி மாளிகை என அழைக்கப்பட்ட தற்போதைய ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தபோது அங்கிருந்த கோதாவும் மனைவியும் (பசிலும் இருந்ததாக இப்போது கூறப்படுகிறது) பின்கதவால் பாய்ந்து கடற்படைக் கப்பலில் தப்பிச் செல்ல நேர்ந்தது.
மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் என்ன செய்தனர்? நீச்சல் தடாகத்தில் குளித்தனர். படிக்கட்டுகளில் துள்ளி விளையாடினர். சோபாக்களில் அமர்ந்து மகிழ்ந்தனர். பஞ்சணையில் உருண்டு புரண்டனர். சமையலறைக்குள் இருந்த உணவுப் பொருட்களை உண்டு களித்தனர். கழிவறை, உடைமாற்று அறை என்று ஒவ்வொரு அறையாகப் புகுந்து செல்பி எடுத்துப் பதிவிட்டனர்.
நாட்டை மீட்க, மக்களுக்கு நிவாரணம் வழங்க, ஊழலையும் மோசடிகளையும் களையவென ஆட்சித் தலைமைகளை துரத்தப் புறப்பட்டவர்கள் – ஜனாதிபதி மாளிகையில் தங்கள் சின்னத்தனங்களால் போராட்டத்தின் உயர் நோக்கத்தினை சிதறடித்தனர் என்பது மறைக்கத் தேவையில்லாத உண்மை. இதன் விளைவே இப்போதைய அரசியல் மாற்றங்கள்.
கடந்த வாரம் இப்பத்தியில் குறிப்பிட்டவாறு, ஓடு மீன் ஓடி உறுமீன் வரும்வரை காத்திருந்த கொக்குப் போன்ற ரணிலின் நாடகம் இங்கிருந்துதான் ஆரம்பமானது. அதற்கு உகந்ததாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமராகவிருந்த அவருக்கு கை மாறியது.
பெயரளவில் பதில் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டு அழைக்கப்பட்டபோதும், ரணில் பிரதமர் ஆசனத்திலேயே (நாடாளுமன்றத்திலும்) அமர்ந்திருந்தார். ஜனாதிபதி ஆசனத்துக்கான தனது நகர்வை அவர் இலகுவாக மேற்கொள்ள இந்த மென்போக்கு அவருக்கு லாவகமாக கை கொடுத்தது.
இலங்கையில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதி நாட்டைவிட்டு பல நாடுகள் ஊடாக தப்பி ஓடி, எங்கிருந்தோ பதவி துறக்க – கடந்த பொதுத்தேர்தலில் யானையையும் சரிய விட்டு கையறு நிலையில் நின்ற ரணில் அந்த இடத்துக்கு நிரப்பப்பட்டதே தனித்துவமான ஒரு வரலாறு.
ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் முழுமையாகத் தோற்றபோதும் அந்தக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியலூடாக ஓர் இடம் கிடைத்தது. அதன் வழியாக நாடாளுமன்றம் செல்ல பத்து மாதங்களாக ரணில் மறுத்து வந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அன்றைய பிரதமர் மகிந்த கேட்டுக் கொண்டபோதும்கூட ரணில் இணக்கம் காட்டவில்லை.
ஆனால், பத்து மாதங்களின் பின்னர் 2021 யூன் 23ல் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் புகுந்த ரணில் ஒரு வருடத்தின் பின்னர் இப்போது பிரதமராகி, ஜனாதிபதியும் ஆகிவிட்டார் என்பது பலரும் மூக்கில் விரலை வைத்து வியக்கும் பாடம்.