கைவிடப்பட்டது காவல் படையின் சீருடை விவகார வழக்கு!
யாழ்.மாநகர சபையால் உருவாக்கப்பட்ட „காவல் படை“ தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு, நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் , யாழ்.மாநகர சபையினரால் காவல் படை உருவாக்கப்பட்டது. யாழ்.மாநகர சுகாதாரத்தை மேம்படுத்துதல், குப்பைகளை பொது இடங்களில் வீசுவார்கள் மற்றும் துப்புவோர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக அபராதம் விதித்தல், தேவைப்படின் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவே காவல் படை உருவாக்கப்பட்டது.
குறித்த காவல் படையின் சீருடையானது, தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையினரின் சீருடையை ஒத்தது என பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
காவல் படையை சேர்ந்தவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் , தொடர்ந்து யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனிடமும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு யாழ்.மாநகர சபை மேயர் மணிவண்ணனை அழைத்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேயரை கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா அழைத்துச் சென்றனர்.
விசாரணைகளின் பின்னர் மறுநாள், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மேயர் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்றால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.