தப்பியோட பாதுகாப்பு:கோத்தா விடாப்பிடி!
கட்டுநாயக்க மற்றும் மத்தளன் ஊடான வெளியேற்ற முயற்சி தோல்வியுற்றுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.
தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் விமான நிலையம் ஊடாக பாதுகாப்பான நாட்டுக்கு செல்ல அதிகாரிகளும், மக்களும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு இராணுவ முகாமில் கூட தங்க முடியாது. இது உயிருக்கு அச்சுறுத்தலான விடயம் எனவே கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரத்தில் தலையிட்டு நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஷ தற்போது விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவுக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை (SLAF) இன்று மறுத்துள்ளது.
இலங்கை பொலிஸாரை அரசியலில் இருந்து விலக்குவதற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் என கூறிக்கொள்ளும் முன்னாள் பொலிஸ் அதிகாரி அஜித் தர்மபால வெளியிட்ட காணொளியில் ஜனாதிபதி விமானப்படைத் தளபதிக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்திகளில் உண்மையில்லை என்றும், இது விமானப்படை மற்றும் அதன் தளபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் என்றும் விமானப்படையின் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.