பதவியிலிருந்தவாறே கடல் வழியாகத் தப்பிக்க முயலும் கோத்தா: ஏஎவ்பி
ஜனாதிபதி கோட்டாபய வெளிநாடு செல்லும் முயற்சி குடிவரவு அதிகாரிகளின் எதிர்ப்பினால் தடுக்கப்பட்டது என செய்தி வெளியிட்டுள்ளது ஏ.எவ்.பி.
தடுத்து வைக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக ராஜினாமா செய்வதற்கு முன்னர் தான் வெளிநாடு சென்றுவிட வேண்டும் என அவர் விரும்புவதாக நம்பப்படுகிறது.
இதனையடுத்து மத்தள மஹிந்த ராஜபக்ஷ வானுார்தி நிலைய குடிவரவு அதிகாரிகளும் தமது கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதேவேளை கோட்டாபய மற்றும் பெசில் ஆகியோருக்கு விமான நிலையங்களின் ஊடாக தப்பிச்செல்லமுடியாத நிலையில், கடற்படைக் கப்பல் மூலம் இந்தியா அல்லது மாலைத்தீவுக்கு செல்வதே தற்போதுள்ள வழியாகும் என்று பாதுகாப்பு தரப்பை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் வழியாக நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்தது.
மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். 2007 முதல் 2015 வரையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.
திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு பசில் ராஜபக்ஷ வந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஆனால், விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பார்த்த பயணிகள், அவருக்கு சிறப்புச் சலுகை அளிப்பதை ஆட்சேபித்தனர். அவர் அந்த வளாகத்துக்கு வந்த காட்சிகள் இடம் பெற்ற காணொளி மற்றும் படங்கள் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டன.
இதேவேளை பசில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த விமானம் அதிகாலை 3.15 மணிக்கு துபாய்க்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது.