சர்வதேச நாணய நிதியத்திடம் 6 தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியிலும் தமிழர்களை (இலங்கை வாழ் மற்றும் புலம்பெயர்) பங்குதாரர்களாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் சர்வதேச நாணயநிதியத்திடம் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர் முன்னாள் நீதியரசர். சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ); தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் (புளொட்) தலைவர் சித்தார்த்தன் எம்.பி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா ஆகியோரே கூட்டாக கடிதத்தினை அனுப்பி வைத்தவர்கள் ஆவர்.
குறித்த கடிதமானது, சர்வதேச நாணயநிதியத்தின் கொழும்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அக்கடிதம் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு முறையான நிதிப்பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் குறுகிய நோக்குடைய அரசியல் கொள்கைகளை பின்பற்றி வருகின்றமை அடிப்படையில் காரணமாக அமைகின்றன.
இலங்கையானது, பல்லின,மத, மொழிகள் கொண்டதாகும். பிரித்தானியர்களின் ஆட்சியின்போது அவர்களால் இந்த விடயங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 1948 இல் சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அதிகாரத்தின் கடிவாளத்தினை வைத்திருக்கும் சிங்கள பௌத்த பெரும்பான்மை சமூகமானது, சிங்கள-பௌத்த தேசியவாத நிதிக் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றது
வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதிலும் சிங்கள-பௌத்த தேசத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ச்சியாக ஆட்சிப்பீடத்தில் இருந்த அரசாங்கங்கள் இவ்வாறு, பேரினவாதக் கொள்கைகளை பின்பற்றியதோடு, அவை மக்களின் நலன்களையும் நாட்டின் எதிர்காலத்தையும் கண்டுகொள்ளவில்லை.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூட, பேரினவாதக் கோஷங்களின் அலையில் ஆட்சியைக் கைப்பற்றினார். பேரினவாத கோஷங்களை வெற்றிகரமாக பின்பற்றியதைத் தவிர அவருக்கும் அவரது ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் இந்த நாட்டை வழிநடத்துவதற்கான எந்தவிதமான தகுதிகளும் இல்லை.
குறிப்பாக, ராஜபக்ஷக்கள் இராணுவ செலவினங்களுக்காக பெருமளவில் கடன்களைப் பெற்றனர். போருக்கு அவ்வளவு தொகை தேவைப்பட்டதோ இல்லையோ, பெறப்பட்ட அனைத்து கடன்கள் மூலமும் கொள்வனவு செய்யப்பட்ட படையினரின் தளவாடங்களின் பெறுமதியில் தனிநபர்களுக்கு பெருமளவு தரகுப்பணம் கிடைத்துள்ளது.
2009இல் போர் முடிவடைந்த பின்னரும் படையினருக்கான கொள்னவுகள் தொடர்ந்ததோடு, வருடாந்த வரவு,செலவுத்திட்டத்தில் 15 முதல் 20 சதவீதம் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டும் இருந்தது. இலங்கையானது, படைகளைப் பராமரிப்பதற்கு செலவீனம் செய்யும் நாடுகளின் உலகப் பட்டியலில் 14ஆவது இடத்தில் உள்ளது. படைகளைப் பராமரிப்பதற்காக தொடர்ச்சியாக கடன்களைப் பெற்றமையானது, தற்போதைய நெருக்கடிகளுக்கு பிரதான காரணங்களில் ஒன்றாகவுள்ளது.
அதேநேரம், சீனாவிடம் இருந்து இலங்கை பெருமளவில் கடன்களை பெற்றுக்கொண்டமையால் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனைச் சூழவுள்ள 15000ஏக்கர் நிலப்பரப்பை 99ஆண்டுகள் குத்தகைக்காக சீனாவிடத்திலேயே ஒப்படைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், சீனாவின் நிதியில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பல வருமானத்தை ஈட்டவில்லை. மாறாக, அந்த வெள்ளை யானைகளை பராமரிப்பது போன்ற நிலைமைக்கே இட்டுச் சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கையானது தனது கொள்கைகளை முழுமையாக மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமாகும்.
குறிப்பாக, தற்போதைய நெருக்கடிளைச் சமாளிப்பதற்கு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. பாரியளவிலான முதலீடுகளை பெறுவதற்கான வழிகளைக் காணாத வரையில் தற்போதைய நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாது. மேலும் மேலும் கடன்களைப் பெறுவதானது தற்போதைய கடன் சிக்கல்களுக்கு தீர்வாகாது.
இலங்கை உட்பட பல வறிய நாடுகள் பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்களைப் பெறுவதற்காக கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் இலங்கைக்கு நன்மைகளை வழங்கக்கூடிய முதலீட்டாளர் குழுக்களில் ஒன்றான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்றவற்றில் வசிக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் முதலீடுகளைச் செய்வதற்கு தகுதியானவர்களாக உள்ளனர்.
இவர்கள், தமது சொந்த மண்ணிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு கலவரங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் காரணமாக வெளியேறியவர்களாக உள்ளனர்.
அவ்விதமானவர்கள் முதலீடுகளைச் செய்வதற்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது. அவ்வாறு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே அவர்களின் முதலீடுகள் சாத்தியமாகும்.
விசேடமாக, சர்வதேச ஒப்பந்தங்களின் விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட கூடிவாறாக புலம்பெயர்ந்த தமிழ் முதலீடுகளை வகைப்படுத்தும் அரச கொள்கை மாற்றங்கள் அவசியமாகின்றது.
அத்துடன், இலங்கையின் சார்பாக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தின் எந்தவொரு முயற்சியும் தமிழர்களை பங்குதாரர்களாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்ற உண்மையை வலியுறுத்த விரும்புகிறோம்.
புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கையை இலங்கை அரசாங்கம் பெற முடிந்தால், அது நலிந்து போன இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பிற்கு வழிவகுக்கும்.
புலம்பெயர் தமிழர்களை முதலீடு மற்றும் உதவிக்கான சாத்தியமான மற்றும் சக்திவாய்ந்த ஆதாரமாக இணைத்துக்கொள்வதற்கு சர்வதேச நாணயநிதியமானது இலங்கை குறித்த அதன் ஏற்பாடுகளை முன்மொழியும்போது உள்ளீர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கையின் இக்கட்டான நேரத்தில் உதவி செய்யத் தயாராக உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான நாங்கள், கலந்துரையாடலில் ஈடுபடத் தயாராக உள்ளோம் என்றுள்ளது.