கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?வ-மா-மு- உறுப்பினர் சபா குகதாஸ்
எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டதால் அமைச்சர் கஞ்சன விஐயவர்த்தன கட்டார் நாட்டிற்கு சென்று உதவி கோர முற்பட்ட போது கட்டார் அரசாங்கம் 2019 ஆண்டு கட்டார் சேரிட்டி அமைப்பை இலங்கை அரசாங்கம் பயங்கரவாதப் பட்டியலில் தடைசெய்தமையை நீக்க வேண்டும் என கோரியதன் வெளிப்பாடாக தடையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கட்டார் சேரிட்டி அமைப்பின் தடையை நீக்கி நல்லெண்ண அடிப்படையில் எரிபொருளைப் பெற முற்படுவது போல ஏன் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கி தமிழ் முதலீட்டாளர்களை அழைக்கும் நல்லெண்ண வெளிப்பாட்டை கோட்டா அரசாங்கம் மேற் கொள்ளவில்லை இனவாதமா? பிரிவினைவாதமா?
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் முதலீட்டாளர்கள் என்பது சிறிலங்காவுக்கு மிகப் பெரும் பலம் ஆனால் யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் கழிந்தும் பொருளாதாரத்தில் மிகப் பெரும் கீழ் நிலையை நாடு அடைந்தது மாத்திரமல்ல பிச்சை கூட எடுக்க முடியாத அவல நிலையிலும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் தடைகளை நீக்கி இனப் பிரச்சனைக்கு நியாயமான தீர்வுகளை காண முயற்சிக்க விரும்பவில்லை என்றால் நாடு அழிந்தாலும் இனவாதத்தை கைவிடமாட்டோம் என்பது தானா?
ஆனால் இந்த நாடு எதிர் காலத்தில் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் தடைகளை நீக்கி தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை தீர்வு காண்பதன் மூலமே சாத்தியமாகும்.