எதிர்வரும் யூலை முதல் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம்!
பங்கீட்டு அட்டை அடிப்படையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திட்டம் எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் 20 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.
வாகன உரிமையார்கள் அவர் வசிக்கும் வதிவிடத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தை தெரிவு செய்து அங்கு மட்டுமே எரிபொருளை நிரப்ப முடியும் என்ற வகையில் திட்டம் வரையப்படுகிறது
அரச உத்தியோகத்தர்கள் தமக்கான எரிபொருள் நிலையத்தை தெரிவு செய்து பதிவு செய்யும் வகையில் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அரச உத்தியோகத்தர்கள் திணைக்கள தலைவர்களிடம் மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படுவதுடன் நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தினமும் காலை இரவு என இரண்டு தடவைகள் நேரடியாக சேகரிக்கப்படும். இதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளர் நியமிப்பார்.
பிரதேச செயலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணங்கியுள்ளது.