ஆட்சி மாற்றங்கள் அல்ல
நிலையான அரசியல் மாற்றங்களே அவசியம்! வ- மா-மு-உ- சபா குகதாஸ்
ஆட்சி மாற்றங்கள் அல்ல
நிலையான அரசியல் மாற்றங்களே அவசியம்!
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவு காரணமாக பொருளாதாரம் அதள பாதாளத்தை நோக்கி விரைந்து விட்டது இதனை சீர் செய்ய ஆள் மாற்றம் செய்யும் ஆட்சி மாற்றங்கள் மட்டும் போதாது காரணம் நாட்டில் இதுவரை ஏற்பட்ட அரசியல், பொருளாதார கொள்கைகளின் பலவீனமே முதன்மையான காரணிகளாக விளங்கும் போது அவற்றில் ஒரு நிலையான மாற்றத்தை கொண்டு வருவதே ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டுவரும்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆட்சியிலும் ஏற்பட்ட பலவீனங்களுக்கு ஆட்சி மாற்றத்தையே அஸ்திரமாக கையில் எடுத்து மாற்றி மாற்றி வந்தனர் அத்தகைய கருமங்களின் ஒட்டுமொத்த விளைவையும் இந்த நாடு தற்போது அனுபவிக்கின்றது.
ஆட்சி மாற்றம் என்பது வெறுமனே ஆள் மாற்றமாக இருந்தால் மக்களுக்கு தொடர்ச்சியான ஏமாற்றங்களையே பரிசாக வழங்கும் இதனால் அரசியல் , பொருளாதாரத்தில் நிலையான முன்மாதியான கொள்கைகள் அமுழாக்கம் செய்யப்படுவதுடன் நாட்டில் உள்ள சகல இன மக்களையும் இன மத வேறுபாடுகள் இன்றி தலைமை தாங்கக் கூடிய தலைவர்களும் எதிர்காலத்தில் ஐனாதிபதியாக இருக்க வேண்டும்.
நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போய் உள்ள சகோதர இனமான தமிழினப் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு புதிய அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் அத்துடன் சர்வாதிகாரத் தன்மையற்ற மக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய சமத்துவமாக சகல இனங்களையும் அங்கிகரிக்கின்ற அரசியலமைப்பு மிக அவசியமானது அதுவே நாட்டின் நிலையான அரசியல் பொருளாதார மாற்றத்திற்கு மட்டுமல்ல நிலையான ஆட்சி மாற்றத்திற்கும் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கும் ஆரோக்கியமானதாகும்.