19:யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்று இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்து அதை மூடிவிடுமாறு கோரியிருப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளமையினை வடக்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் வன்மையாக கண்டித்துள்ளன.
இலங்கை அரசின் சார்பில் ஜீ.எல்.பீரிஸ் ஜெனீவாவில் 50 ஆம் கூட்டத்தொடரில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது. சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் அதை முற்றாக நிராகரிக்கிறோமென அறிவித்துள்ளனர்.
அதேவேளை இலங்கை அரசின் போலி நாடகங்களை அம்பலப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்ட போராட்டமொன்றிற்கு எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்கு அழைப்பும் விடுக்கப்பட்டு;ள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு கைலாயப்பிள்ளையார் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து உயிரிழந்த அரசியல் கைதி பார்த்தீபனின் தாயாரது பூதவுடலிற்கான அஞ்சலி நிகழ்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக சந்திப்பில் யாழ்.மாவட்ட பொது அமைப்புக்கள் சார்பில் சி.அருந்தவபாலன்,அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் என்.சுப்பிரமணியம்,குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் சார்பில் கோமகன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தனர்.
போராட்டத்தில் பங்கெடுக்க கட்சி சார் அரசியலிற்கு அப்பால் அனைவரிற்கும் அழைப்பு விடுத்த பிரதிநிதிகள்,பொது அமைப்புக்கள் ,கிராமிய அமைப்புக்கள் என அனைத்து அமைப்புக்களும் பங்கெடுக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆங்கு கருத்து வெளியிட்ட பிரதிநிதிகள் 2021 ஜனவரி 15 ஆம் திகதியன்று அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் குடிசார் அமைப்புகளும் இணைந்து ஒற்றுமையாகக் கோரியிருந்தது போல, சிரியாவுக்கு ஏற்படுத்தப்பட்டதைப் போல முற்றிலும் சுயாதீனமான, சர்வதேச, விசாரணைப் பொறிமுறை ஒன்று நேரடியாக ஐ.நா. பொதுச்சபையின் கிளையமைப்பாக உருவாக்கப்படவேண்டும்.
– ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்சலேற் அம்மையாரின் பதவிக்காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவதற்கு முன்னதாக அவரது அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறையை மேலும் கனதியானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் தரமுயர்த்தவேண்டும். அதற்கேற்ற நிதி உதவியை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்.8
– இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைப் போக்க நிதி உதவி செய்ய முன்வரும் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் தீவில், குறிப்பாக வடக்கு-கிழக்கில், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைப் போக்கி, ஈழத்தமிழர் தேசத்துக்கும் தமிழ்பேசுவோர் உள்ளிட்ட எந்த ஏனைய மக்களுக்கும் எதிரான இன அழிப்போ ஒடுக்குமுறையோ தொடராத வகையில் அரசியல் உறுதிநிலையைத் தீவில் ஏற்படுத்தியே உதவியைச் செய்ய முன்வரவேண்டும். ஏற்கனவே சமாதானப் பேச்சுக்கள் குழப்பப்பட்டதற்கும், சுனாமி அனர்த்தத்தின் பின்னான மீள்கட்டுமானப் பொறிமுறை மறுக்கப்பட்டது போன்றவற்றில் இருந்து கற்ற பாடங்களோடு அரசியல் உறுதிநிலை தொடர்பான காத்திரமான நகர்வுகள் இடம்பெறவேண்டும்.
– இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களும் மாந்தத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல,
எழுபது வருடங்களாக இலங்கை அரசு ஈழத்தமிழர் தேசத்துக்கு எதிராகப் புரிந்துவருகின்ற குற்றங்களுக்கெல்லாம் குற்றமாகிய இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறிந்து, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு உள்ளாக்குமாறு ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகம் தகுந்த ஆணை வழங்கவேண்டும்.
– இன அழிப்புத் தொடர்பான தனிநபர் குற்றவியற் பொறுப்பையும் இலங்கை அரசின் பொறுப்பையும் இன அழிப்பைத் தண்டித்துத் தடுக்கும் 1948 சாசனத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக்கு உள்ளாக்கவேண்டும்
– ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கும் அப்பால், மனித உரிமை ஆணையாளரும் ஐ.நா. செயலாளர் நாயகமும் நேரடியாக இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ஐ.நா. அவையின் அதியுயர் மட்டத்தில் பாரப்படுத்திக் கையாளவேண்டும்.
– தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்படவேண்டும்.
– வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பொறுப்புக்கூறல் சர்வதேச மட்டத்தில் கையாளப்படவேண்டும்.
– சிங்களப் பெரும்பான்மை ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்குக் கிழக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்படவேண்டும்.
– தமிழர் தாயகத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், மரபுரிமையை வரலாற்று உண்மைக்குப் புறம்பாக சிங்கள-பௌத்தமாக திரிபுபடுத்துவதை இனிமேலும் நடைபெறாத வண்ணம் நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டும். முழுமையான மீள்குடியேற்றமும் காணி உரிமைகளும் தமிழ்பேசும் மக்களுக்கு உறுதிப்படுத்தப்படவேண்டும்.
– இலங்கையின் அரசாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிப் போராடும் தென்னிலங்கை மக்கள், தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகமான வடக்கு-கிழக்கை உரிய முறையில் அங்கீகரிக்கவும், அரசியல் வேணவாவைப் புரிந்து, அங்கீகரித்து, தேசிய இனச் சிக்கலுக்கு ஏதுவான அரசியலமைப்பு மாற்றங்களையும் ஒரு சேரச் சேர்த்துக் கோரவேண்டும். தமிழ் மக்களின் நினைவுத்திற உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும். ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நீண்டகாலமாக இனப் பிரச்சனையைத் தீர்க்காததன் ஒரு பக்க விளைவே என்பதைப் புரிந்துசெயற்பட முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.