முடக்கமில்லையென்கிறனர்: ரணில்-கோத்தா!
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் மேலோங்கி வருவதால் அடுத்து வரும் இரு வாரத்திற்கு “பொது முடக்கம்” மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதை ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மறுத்துள்ளனர்.
இரு வாரத்திற்கு நாட்டை முடக்கும் திட்டம் உள்ளதா என அமைச்சர்கள் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்ட போதே அவ்வாறு ஒரு திட்டம் இல்லையென இருவரும் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அடுத்த வாரத்தில் எரிபொருளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நாட்டை முழுமையாக மூடவோ, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவோ தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் அடுத்த திங்கள்கிழமை முதல் இரண்டு வார காலத்திற்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கு ஒன்லைன் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, என தெரிவிக்கப்படுகின்றது.