November 22, 2024

அரசியல் துறவறத்துக்கு கோதா தயார்! பசிலுடன் சுமந்திரன் இணைவது ஏன்? பனங்காட்டான்


மகிந்தவைத் தொடர்ந்து பசிலும் வீடேகி விட்டார். அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென உத்தரவாதம் கொடுக்கும் கோதபாய, அதுவரை தம்மைப் பதவியில் இருக்க விடுமாறு இரந்து கேட்கிறார். இதற்கிடையில் நாடாளுமன்றத்தை கலைக்கக் கோரும் பசிலுடன் ஒத்தூதுகிறார் சுமந்திரன். நல்லாட்சியில் ரணிலின் உற்ற தோழனாக இருந்த சுமந்திரன் இப்போது அவரை பரம எதிரியாகப் பார்ப்பதுடன் நிற்காது பசிலின் கூட்டாளியாவது ஏன்?

விநோதமானவரே விநோதமானவரே என்ற சினிமாப் பாடலொன்று சில காலமாக பலராலும் விரும்பிக் கேட்கப்பட்டது. ஏதாவதொன்றை விநோதமாகச் செய்வதை இப்படி அழைப்பார்கள். 

கடந்த ஒரு மாதமாக இலங்கை அரசியலில் அவசரம் அவசரமாகவும், எதிரும் புதிருமாகவும் இடம்பெறும் சம்பவங்களைப் பார்க்கையில் விநோதமாக இருக்கிறது. பிரபலமான வின்ஸ்லோஸ் அகராதி விநோதம் என்ற சொல்லுக்கு பொழுதுபோக்குக்காக – மற்றவர்களை உற்றுநோக்க வைக்கும் எண்ணத்தில் மாயவித்தை காட்டுவதை அர்த்தமாகக் குறிப்பிடுகிறது. 

இலங்கை அரசியலில் இடம்பெறும் விநோதங்களை அவ்வாறு அர்த்தப்படுத்திப் பார்க்க முடியாது. எல்லாமே தலைகீழாக இடம்பெறுகின்றன. 

2019ல் இடம்பெற்ற தேர்தலில் 69 லட்சம் வாக்குகளால் ஜனாதிபதிப் பதவிக்கு வந்தவர் கோதபாய. 2020ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 68 லட்சம் வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த பிரதமரானார். அரசியலில் தம்பியும் அண்ணனும் முறையே ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு வந்தது புதுமை. 

இலங்கையின் முதலாவது அரசியற் கட்சி என்ற பெயரைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி 2020ம் ஆண்டுத் தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்குகளை மட்டும் பெற்று ஒரு ஆசனத்தைக்கூட பெறமுடியாது போனது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி இத்தேர்தலில் 27 லட்சம் வாக்குகளைப் பெற்றதுடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருமானார். இதுவும் ஒரு புதுமை. 

இந்தப் புதுமைகளை ஓரந்தள்ளி விட்டு, கடந்த மாதம் (மே) 9ம் திகதி இடம்பெற்றவைகளை விநோதமானவை எனலாம். 68 லட்சம் வாக்குகளால் பிரதமரான மகிந்த இதே நாளில் பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க – ஆனால் மனம் ஒப்பாது இது இடம்பெற்றது. மறுநாளான மே பத்தாம் திகதியன்று இரண்டரை லட்சம் வாக்குகளை மட்டும் தேர்தலில் பெற்ற கட்சியின் தலைவரான – ஆனால் தேர்தலில் வெற்றி பெறாத ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார் கோதபாய. 

ஒரு நாடகத்தின் முதலாம் கட்டம் இதுவென்றால், இரண்டாம் கட்டம் இதனிலும் விநோதமானது. எப்படியாவது ரணிலை பிரதமர் பதவியிலிருந்து இறக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று திடசங்கற்பம் பூண்டு அதற்கேற்றவாறு பொதுஜன பெரமுனவினரை வழிநடத்திய பசில் ராஜபக்ச தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ளார். இது யூன் 9ம் திகதி இடம்பெற்றது. 

மே 9ல் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த விலக, யூன் 9ம் திகதி பசில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இலங்கை அரசியலில் இவை வித்தியாசமான விநோதங்கள். 

இலங்கை அரசியலில் ரணிலின் அணுகுமுறையும் சாமர்த்தியமும் நாற்பத்தைந்து வருட அனுபவத்தால் வந்தது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் பெற்ற அனுபவம் வேறு. இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் ராஜபக்சக்களை தோற்கடிக்கவென தமது கட்சியின் சார்பில் இருவரை (சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன) நிறுத்திய அனுபவம் இன்னும் வேறானது. எந்தவொரு கட்சித் தலைவரும் இவ்வாறு விட்டுக் கொடுத்து அரசியல் செய்யவில்லை. தனது தோல்வியை எதிர்பார்த்தவர் தனது கட்சி வெல்ல வேண்டுமென்று எண்ணி இவ்வாறு நடந்துகொண்டது விசித்திரமானது. 

இப்போதும் அதே வியூகங்களையே அவரிடம் காண முடிகிறது. கோதாவும் மகிந்தவும் இணைந்து நிறைவேற்றிய இருபதாம் அரசியல் திருத்தத்தை இல்லாமல் செய்ய இருபத்தோராம் திருத்தத்தை நிறைவேற்ற உறுதி கொண்டுள்ளார் ரணில். தமது ஜனாதிபதி பதவியைக் காப்பாற்றுவதற்காக – தமது சகோதரர்களையும் துறந்து ரணிலோடு இணைந்து போகிறார் கோதா. இருவர் நிலைப்பாடும் கரணம் தப்பினால் மரணம் போன்றது. 

இப்போது இந்த அரசியல் சூதாட்டத்தில் பலியாகியுள்ளவர் பசில் ராஜபக்ச. இருபத்தோராவது அரசியல் திருத்தம் இரட்டைப் பிரஜாவுரிமைக்காரர்களை எந்தப் பதவியும் வகிக்க முடியாது தடுப்பது. இத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென்பது ஓரளவுக்கு நிச்சயமாகிவிட்டது. அதன் பின்னர் பதவி பறிபோவதைவிட அதற்கு முன்னர் அப்பதவியிலிருந்து விலகி விட்டார் பசில். 

இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால், பசிலைப் போன்றே ரணிலும் தேசியப்பட்டியலூடாக நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்பதுவே. அண்ணன் ஜனாதிபதியின் ஆட்சியில் தம்பி பசிலின் பதவிக்கு வேட்டு வைத்துள்ளார் ரணில் என்றால், குருசேத்திரத்தில் அரசியல் சதுரங்கம் எவ்வாறு விளையாடப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், அரச நிர்வாகத்தில் பங்கேற்காவிட்டாலும் அரசியலைத் தாம் தொடரப் போவதாக பசில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் விடுத்த எட்டாம் திகதியன்று அவரது மனைவி அமெரிக்கா திரும்பி விட்டார். இவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அங்குதான் வசிக்கிறார்கள். இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள பசில் எப்போதும் அங்கு போய் வரலாம். 

பசிலின் அறிவிப்புக்கு நிகரான அறிவிப்பொன்றை கோதபாய இந்த வார முற்பகுதியில் விடுத்திருந்தார். அந்த அறிவிப்பு பின்வருமாறு அமைந்தது – தோல்வி அடைந்த ஜனாதிபதியாக நான் வெளியேற மாட்டேன், ஆனால் மீண்டும் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்பதுவே இந்த அறிவிப்பு. 

கோதா கோ ஹோம் பேரெழுச்சி ஆரம்பித்த நாளிலிருந்து ஜனாதிபதி பதவியிலிருந்து விலக மறுத்து வந்த இவர், அறுபத்தொன்பது லட்சம் மக்கள் தம்மை இப்பதவிக்குக் கொண்டு வந்தவர்கள் என்றும் அவர்கள் தம் பக்கமே உள்ளனர் என்றும் அறைகூவி வந்தார். இப்பதவியை தக்க வைப்பதற்காகவே மற்றைய ராஜபக்சக்களின் பதவிகளைப் பறித்தார். ஆனால், இப்போது அதற்கும் அப்பால் சென்று ஒரு விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளார். அது – நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பது. 

இந்த உத்தரவாதம் எட்டாத பழம் புளிக்கும் என்பது போன்றது. மார்ச் 31ம் திகதியிலிருந்து பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக வாசம் செய்பவர் எவ்வாறு அடுத்த தேர்தலை நினைத்துப் பார்க்க முடியும். அதனாற்தான் கிடைத்த பதவியை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறார். தோற்றவராக வீடு போக எந்த ராணுவத்தினரும் விரும்புவதில்லைத்தானே!

இந்தப் பின்னணியில்தான் இப்போது அவர் விடுத்திருக்கும் அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். நான் மீண்டும் அரசியல் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன் தயவு செய்து என்னை இப்பதவிக்காலம் முடியும்வரை ஜனாதிபதியாக இருக்க அனுமதியுங்கள் என்று தம்மைப் பதவி விலகக்கோரும் போராட்டக்காரர்களிடம் இவர் விநயமாக இரந்து கேட்பது போலவே இதனைப் பார்க்க வேண்டும். 

சர்வதேசத்தின் கண்களில் நன்கு அறிமுகமான, நன்கு அறியப்பட்ட ரணிலை முன்னிறுத்தி தம்மைப் பல வழிகளிலும் காப்பாற்றிக்கொள்ள முனைகிறார் கோதா. தேவைப்பட்டால் ரணிலின் முதுகிலும் குத்தத் தயங்காதவர். உலகிலுள்ள அத்தனை வங்கிகளின் கதவுகளும் தட்டப்படுகிறது. சீனா, இந்தியா என்பவற்றுக்கு அப்பாற் சென்று நேரடியாகவே முக்கிய வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து உதவி கோருகிறார் கோதா. 

சர்வதேச நாணய வங்கியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பல்லாயிரம் அரச ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் தயாராகிறது. பொதுமக்களுக்கான சில சலுகைகளில் வெட்டு வருகிறது. அலுவலகங்களை வெள்ளிக்கிழமைகளில் மூடி ஊழியர்களை வீட்டில் நின்று தோட்டம் செய்யுமாறு நவீன ஆலோசனை வழங்கப்படுகிறது. 

பலாக்காய், ஈரப்பலாக்காய், வற்றாளைக் கிழங்கு போன்றவற்றை தாராளமாகச் சாப்பிடுமாறு இலவச ஆலோசனையும் கொடுக்கப்படுகிறது. சமையலுக்கு எரிபொருள் இல்லாததை மறைக்க விறகுகளைப் பயன்படுத்தினால் ஆயுள் கூடுமென அபார கண்டுபிடிப்பு வேறு. 

இவைகளுக்கிடையே நாடாளுமன்றத்தை உடன் கலைத்து தேர்தல் நடத்துமாறு பசில் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். சொல்லி வைத்து பேசுவதுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரனும் அதே வேண்டுகோளை விடுக்கிறார். 

நல்லாட்சிக் காலத்தில் ரணிலின் உற்றதோழனாகவிருந்த சுமந்திரன், இன்று அவரை பகிரங்கமாக எதிர்ப்பதோடு நிற்காது, முழுமையாக பசிலின் உயிர்த்தோழனாக மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த பொதுத்தேர்தல் முடிவுக்கான கைமாறு இதுவென கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. எல்லாமே சந்திக்கும் சந்தைக்கு வரும் நேரம் நெருங்கி வருகிறதாகவும் கூறுகிறார்கள். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert