எரிவாயு:நாங்கள் மாட்டோம் ;கிராமசேவையாளர்கள்
எரிவாயு விநியோகத்தில படையினரை முதலில் பயன்படுத்த முற்பட்டு மூக்குடைப்பட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் அடுத்து கிராமசேவையாளர்களை பயன்படுத்த முற்பட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளனர்.
எரிவாயு விநியோகம் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த வேண்டாம் என யாழ் மாவட்ட இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குடுப்பிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் யாழ்மாவட்ட கிராம உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கமைவாக இரு மாதங்களுக்கு முன்னர் தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்து அது தொடர்பாக தங்களுடன் எமது இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க யாழ்மாவட்ட தலைவர் தொலைபேசியில் உரையாடியதற்கமைவாக எரிவாயு விநியோகத்தில் இருந்து எம்மை விடுவித்திருந்தீர்கள் . அது தொடர்பாக பிரதேச செயலகம் ஒன்றில் நடைபெற்ற குழப்பத்தினையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் . தற்போது எரிவாயு விநியோகம் தொடர்பாக தங்களது ஊடக அறிக்கையையும் பார்வையிட்டோம் . பொது மக்களை உரிய விநியோகஸ்தர்களிடமே பதிவை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தீர்கள்.
தற்போது பிரதேச செயலகங்களில் வெவ்வேறான முறைகளில் எரிவாயு விநியோகம் தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு வருவதாக கிராம உத்தியோகத்தர்கள் அறியத்தந்துள்ளனர் . விநியோகஸ்தர்கள் பட்டியல் மற்றும் எரிவாயு தேவையானோர் பட்டியல் போன்ற விடயங்களை தயார் செய்து தருமாறும் கிராம அலுவலகர்களிடம் கூறப்பட்டுள்ளது . இந்த எரிவாயு விநியோகம் தொடர்பில் ஈடுபடுத்தினால் விநியோகஸ்தர்கள் விடும் தவறுகளிற்கு நாமே பதிலிறுக்க வேண்டிவரும்.
இதனால் எமது அங்கத்தவர்களிற்கு இதனால் பாதிப்புக்கள் ஏற்பட வாய்பிருப்பதனால் மேற்படி சிக்கல் நிறைந்த எரிவாயு விநியோகத்தில் எம்மை ஈடுபடுத்தாமல் எம்மை விடுவித்து உதவுமாறு கேட்டுக் கொள்வதோடு இது தொடர்பில் பிரதேச செயலகங்களிற்கு அறிவுறுத்தலினை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.