November 21, 2024

முள்ளிவாய்க்காலிற்கு சிங்களவரும் வருக

எதிர்வரும் மே18ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல் நிலைமைக்கு காரணமான ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல் என காலிமுகத்திடல் தொடக்கம் நாடு பூராகவும் போராட்டம் இடம்பெறுகின்றது.

போராட்டங்கள் ஜனநாயகரீதியான போராட்டம் என்பதால் எவரையும் கைது செய்யவில்லை. அந்த வகையில் நாமும் இதனை வரவைற்பதோடு போராட்டத்திற்கான ஆதரவை தெரிவிக்கின்றோம்.

அத்துடன் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு யுத்தகாலத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை சகோதர சிங்கள மக்களும் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய அறிவிப்பு நாட்டில் ஏற்பட்ட பாரிய மாற்றமாகும்.

இந்நிலையில் தமிழ் மக்களின் மனங்களில் புரையோடிப்போயுள்ள யுத்த வலிகளை நினைவுகூர்ந்து யுத்தத்தால் மரணித்த தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டு அம் மக்களுக்காக அஞ்சலி செலுத்த அழைத்து நிற்கின்றேன் எனவும் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert