கௌதாரிமுனைகடல் அட்டைப் பண்ணை மூடப்பட்டதா?
பூநகரி கௌதாரிமுனையில் சீன கூட்டு நிறுவனத்தால் அமைக்கப்பட்ட கடல் அட்டைப் பண்ணையை தொடர்ந்தும் பராமரிக்க முடியாமல் முழுமையாக அகற்றப்பட்டது.
பூநகரியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிதாக அமைக்கப்பட்ட இந்த கடலட்டைப் பண்ணையானது உள்ளூர் அமைப்புக்களின் அனுமதியோ அல்லது மாவட்ட நீரியல் வளத்தினைத் திணைக்களத்தினதோ அனுமதி இன்றி அமைக்கப்பட்டபோது கடும் விமர்சணம் முன் வைக்கப்பட்டது. இதே நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கடல் அட்டை குஞ்சு உற்பத்திப பண்ணை ஒன்றும் உள்ளது
இவ்வாறு அமைக்கப்பட்ட பண்ணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு கேள்வி எழுப்பியிருந்தனர். இதனால பெரும் சர்ச்சையும் உருவானது.
இந்த சர்ச்சையின் மத்தியில் கடந்த ஆண்டு இறுதியில் யாழ்ப்பாணம் வந்த சீனாவின் இலங்கைக்கான தூதுவர் அரியாலையில் உள்ள பண்ணைக்கும் நேரில் பயணித்தார்.
இந்த நிலைமையில் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் எரிபொருளை பெறுவதில் உள்ள சிரமத்தின் காரணமாக இந்த பண்ணையை பராமரிக்க முடியாத காரணத்தினால் பூநகரி கௌதாரிமுனையில் அமைக்கப்பட்டிருந்த கடல் அட்டைப் பண்ணை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
இந்த கடல் அட்டைப பண்ணையானது உள்ளூர் மீனவ அமைப்பின் ஒப்புதலின் பெயரில் அனுமதி வழங்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சின் நெக்டா நிறுவனம் அப்போது பதிலளித்தபோதும் ஒப்புதல் அளித்த மீனவ அமைப்பிடம் ஒப்புக்கொண்ட பணம் வழங்கப்படாதமையினால் அனுமதி நீடிப்பிற்கு மீனவ அமைப்பும் மறுத்து வந்தனர்.