இலங்கையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் தமிழ் இளைஞர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டப்பகுதியில் மருத்துவ சேவை செய்து, கவனம் ஈர்க்கிறார் ஒரு தமிழ் இளைஞர்.
இலங்கையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த காலங்களில் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது தொடர் போராட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.
தலைநகர் கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் கடந்த 9ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டம், 14வது நாளாக தொடர்ந்து வருகின்றது. நாளாந்தம் பல்லாயிரணக்கான மக்கள் காலி முகத்திடலுக்கு வருகைத் தந்து போராட்டத்தில் கலந்துக்கொண்டு, அரசாங்கத்தை வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு போராட்டத்திற்கு வருகைத் தந்து கோஷங்களை எழுப்பும் பலர், திடீர் சுகவீனமுற்று வருவது காணக்கூடியதாக இருந்தது. இதையடுத்து, செஞ்சிலுவை சங்கம் மற்றும் செயின்ட் ஜான்ஸ் அம்புலன்ஸ் சேவை ஆகியன காலி முகத்திடலில் சிறப்புக் கூடாரங்களை அமைத்து, மக்களுக்கான மருத்துவ முதலுதவிகளை செய்து வருகின்றன.
தொடரும் இலவச சேவை!!
மாரடைப்பு, ரத்த அழுத்தம், மயக்கம் உள்ளிட்ட திடீர் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறவர்களுக்கு இந்த இடத்தில் முதலுதவிகள் வழங்கப்பட்டு, அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கும் நடவடிக்கைகளை இலவசமாக இந்த இரண்டு அமைப்புக்களும் முன்னெடுத்து வருகின்றன.
„இது ராஜபக்ஷக்களின் நாடல்ல“அரசுக்கு எதிராக இலங்கை முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு.
‚உயிரைப் பறிக்கவே சுட்டனர்’இலங்கை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன?
பிபிசி கள ஆய்வு
இந்த 14 நாட்கள் போராட்ட காலப் பகுதியில், ஆயிரக்கணக்கானோருக்கு இந்த இடத்தில் முதலுதவிகள் வழங்கப்பட்டு, அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற இந்த சமூக சேவை நிறுவனங்களின் அதிகாரிகளினால் முடிந்துள்ளது.
கவனம் ஈர்க்கும் தமிழ் இளைஞன்!!
இலங்கை ஜெய்ஷன்
இந்த நிலையில், செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சேவையில் பணி புரியும் ஒரு தமிழ் இளைஞர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் ஜெய்ஷன் என்பவரே அவர்.
முதல் நாளில் போராட்டத்திற்கு வருகைத் தந்த ஜெய்ஷன், பின்னர் அங்கு சமூக சேவைகளை செய்ய முன்வந்தார். போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பின்னர் அங்குள்ள குப்பைகளை அகற்றி, போராட்டம் நடத்தும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கும் பணியை முதல் நாளிலேயே ஆரம்பித்தார்.
அதன்பின்னர், காலி முகத்திடலில் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனம் தம் சேவையைத் தொடங்கிய நிலையில், அந்த அமைப்புடன் இணைந்துள்ள அவர் தற்போது உயிர் காக்கும் சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
காலை முதல் மாலை வரை தொழிலுக்கு சென்று, மாலை வேளையில் காலி முகத்திடலிலுள்ள செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சேவையின் தன்னார்வ தொண்டராக கடமையாற்றி வருகின்றார்.
கொழும்பில் வசிக்கும் ஜெய்ஷன், செயின்ட் ஜான்ஸ் குழுவிலும், சாரணர் குழுவில் சமூக சேவையை செய்து வருகிறார்.
முதலாவது நாள் நானும் என்னுடைய சகோதர மொழி நண்பனும் இந்த போராட்டத்திற்கு வந்திருந்தோம்.
அடுத்த நாள் காலையிலும் இந்த இளைஞர்கள் இருப்பதைப் பார்த்;து அதிர்ச்சியானோம். அதுக்கு பிறகு நாங்களும் என்ன நடக்கிறது என்று வந்து பார்த்தோம்.
போராடுபவர்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு!!
அந்த நேரம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஒரு சின்னதொரு மருந்து பெட்டியோடு நண்பர் ஒருவர் தனியாக சுயேட்சையாக இங்கு வருவோருக்கு முதலுதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், எனக்கும் முதலுதவி தெரியும் என்று சொல்லி நானும் அவரோடு இணைந்து கொண்டேன்.
இலங்கை செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பில் நான் ஒரு அதிகாரியா இருக்கிறேன். அதனால், எங்கள் சேவையை இங்கே தொடங்கவேண்டும் என்று எனக்கு யோசனை வந்தது. இதையடுத்து எமது கூடாரங்களை அமைத்து இங்கு எமது பணிகளை ஆரம்பித்தோம் என அவர் கூறுகிறார்.
போராட்டத்தில் ஈடுபடுவோர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாகவும் அவர் தெரிவிக்கிறார். “ஏராளமான நோயாளிகளை இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. முக்கியமாக இந்த போராட்டங்களில் குடும்பங்களாக வந்து கோஷம் எழுப்புவதை காண முடிகிறது.
உறக்கமில்லாமல் தொடரும் சேவை!!!
இலங்கை ஜெய்ஷன் மருத்துவ சேவை!!
அவர்களுடைய தொண்டைகளில் பிரச்சினை, அவர்களுடைய ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. பகல் நேரங்களில் அதிக வெயில் காரணமாக மயக்க நிலை ஏற்படுது.
இப்படிப்பட்ட பலதரப்பட்ட சிக்கல்கள் வருகின்றன. அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் உடனடியாக சென்று, அவர்களுக்கான முதலுதவிகளை வழங்கிட்டு, அதையும் தாண்டி சிக்கல் இருந்தால், உடனடியாக எங்களுடைய ஆம்புலன்ஸ் மூலமாக பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்.
முக்கியமாக இந்த இடத்தில் ஏராளமான மருத்துவர்கள் தன்னார்வலராக மாறி மாறி இரவு பகலாக இந்த இடத்தில் இருக்கிறார்கள். 24 மணித்தியாலங்களுக்கும் இந்த சேவை இந்த இடத்தில் நடக்கிறது. இங்குள்ள அனைவரும் தமது சொந்த தொழிலை செய்து விட்டு, பின்னர் இந்த சேவையை உறக்கமில்லாமல் செய்துக்கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டார்.
ஏன் உங்களுக்கு இவ்வாறு தன்னார்வ தொண்டு செய்வதற்கான எண்ணம் வந்தது? என்று கேட்டதற்கு, என்னை பொருத்தரை என்னுடைய சிறு வயதில் இருந்து நான் ஒரு சாரணனாக இருந்தேன். தற்போது சாரண ஆசிரியராக இருக்கின்றேன். அதேபோல செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அமைப்பில் நான் ஒரு அதிகாரியாக (தன்னார்வ அடிப்படையில்) இருக்கிறேன்.
பாடசாலை காலத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை எனக்கு உள்ளது. அதனால் செய்கிறோம். முக்கியமான காரணம் என்று எதையும் சொல்ல முடியாது. சின்ன வயதில் இருந்து இந்தப் பணிகளை செய்து பழக்கப்பட்டுவிட்டேன்.என்கிறார்.
‚உயிர் காப்பது பாக்கியம்‘
காலையில வேலைக்குப் போய்விட்டு, மாலை இங்கே வந்து சிறிது நேரம் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு, காலை 6 மணி வரை எங்கள் சேவைகளை செய்வோம். வேலை நேரத்தில் தூக்கம் கண்ணை சுற்றும். கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த மக்களுக்கு உதவி செய்வதை நினைக்கும் நேரம் அந்த வேதனைகள், கஷ்டங்கள் எல்லாம் மறந்துவிடும் என பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், உலகத்திலயே ஒரு சிறந்த உதவி என்று சொன்னால், ஒருவரது உயிரைக் காப்பதுதான்.
என்னை பொருத்தவரை முதலுதவிகளின் ஊடாக அப்படியாக உயிர்களை காப்பாற்றுவதை பெருமையாகவும் நினைக்கிறோம். ஒருவரது உயிரைக் காப்பதை பெரிய பாக்கியமாக நினைக்கிறோம்“ என்றார் ஜெய்ஷன்.
மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும்!!
தங்களைப் போல பலரும் இது போன்ற சேவைக்கு வர வேண்டும். குறிப்பாக இளையதலைமுறையாக உள்ள மாணவர்கள் முதலுதவிப் பயிற்சியை கட்டாயம் பெற வேண்டும் என்கிறார். அவர் கூறுகையில்,
“இந்த போராட்டம் எல்லாம் எதிர்காலத்திற்காக நடக்குது. முக்கியமாக பாடசாலையிலுள்ள மாணவர்களுடன் எங்களுடைய பாடத்திட்டத்திற்காக அவர்களை சந்திப்பது வழக்கம். பாடசாலையில் கூட, வீடுகளில் கூட, நிறைய பெற்றோர் இதை பார்த்திட்டு இருப்பாங்க.
பாடசாலை கல்வியை அடுத்து, இந்த மாதிரி ஒரு விடயத்தை பிள்ளைகள் படிக்க, கட்டாயம் வழி அமைத்து கொடுங்க. பிற்காலத்துல அது அவர்களுக்கு உதவும். மற்றபடி ஒழுங்காக சொல்லிக்கொடுக்கவேண்டும். அதன் மூலமாக நாட்டிற்கு நல்ல சேவை செய்யும் ஒருவரா அவர் வளர்வார் என பதில் வழங்கினார்.