பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் – யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சந்திப்பு இடம்பெற்றது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள டெரன்ஸி (Drancy) மாநகர சபையின் முதல்வர், பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை நடந்தேறியுள்ளது, இந்த இனப்படுகொலைக்கு ஒரு நீதியான ஒரு தீர்வொன்றை பெற்றுத்தருவதற்கு பிரான்ஸ் அரசு தொடர்ந்து அழுத்தங்களையும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கோரியிருந்தார். அத்துடன் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு உதவ முன்வருகின்ற நாடுகள் மற்றும் அமைப்புகள் தமிழர்களின் உரிமைசார் பிரச்சினைகளுக்கு நீதியை பெற்றுத்தரும் வகையில் அழுத்தங்களை கொடுத்து இலங்கை தீவில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்போமென்று இலங்கை அரசு உறுதியளிக்கும் பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கான நிதியுதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், எதிர்காலத்தில் யாழ் மாநகர சபையுடன் இணைந்து டெரன்ஸி (Darancy) மாநகர சபை பணியாற்ற வேண்டுமென்றும் போரினால் அழிவுற்ற எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.இச் சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த டெரன்ஸி (Darancy) மாநகர முதல்வர் இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் டெரன்ஸி(Darancy) மாநகர சபையில் அது தொடர்பாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருப்பதாகவும் தாம் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.அத்துடன் கருத்து தெரிவித்த பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தற்பொழுது அந்த இனப்படுகொலையை வழிநடத்தியவர்களே ஆட்சியில் இருப்பதாகவும், பிரான்ஸ் நாட்டிலே இலங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற வகையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நீதியான தீர்வை பெற்றுத்தருவதற்கு பல்வேறுபட்ட அழுத்தங்களை கொடுப்பதாகவும் தொடர்ந்தும் எம்முடன் இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இச் சந்திப்பில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.