கே.பியை கைது செய்ய கோத்தாவிற்கு சிபார்சு!
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. என்றழைக்கப்படும் கீர்த்தி ரத்னவை கைது செய்வதற்கு போதிய சாட்சியங்கள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேகாலை பிரிவின் பொறுப்பாளராக இருந்த கீர்த்திரத்ன ஏப்ரல் 19 அன்று ரம்புக்கனையில் நடைபெற்ற பொதுப் போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவிட்டிருந்தார். துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் இதுவரை கிடைத்துள்ள நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீர்த்திரத்ன உள்ளிட்ட மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவரையும் கைது செய்யவில்லை எனவும் பொதுமக்கள் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, எஸ்.எஸ்.பி கீர்த்திரத்ன, மஹிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்பது, நாட்டில் தற்போது நிலவும் ராஜபக்ச எதிர்ப்பு உணர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றமை சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.