நகரங்கள் தோறும் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் இன்று (20) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒரு வார காலத்துக்கு நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் பிரசாரத்தை முன்னெடுக்க ‚தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு‘ தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கி அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாட்டுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இன்று ஆரம்பமாகவுள்ள ஹர்த்தாலைத் தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அரச, அரச, தனியார் துறை என அனைத்துத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய நாளை தேசிய எதிர்ப்பு நாளாகக் கருதுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த அவர், அரசாங்கம் பொது வாக்கெடுப்பை மதித்து முடிவெடுக்கும் வரை தனது தொழிற்சங்கக் கூட்டணி தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றும் கூறினார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் பிரசாரம் மற்றும் நாடு தழுவிய தேசிய கறுப்பு எதிர்ப்பு பேரணிகள் இன்று முதல் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தொடரும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.