தமிழ் மக்களிற்கு என்ன பலன்?
தீவிர தமிழ்த்தேசியம் பேசும் முன்னணியினர் விழுந்தடித்துக்கொண்டு அதுவும் தாமாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்குச் சென்று கையெழுத்திட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் பிரேரணையில் கையொப்பமிட்டமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம என சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தாங்களாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்கு சென்று கையொப்பமிட்டுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்னமும் கையெழுத்திடவில்லை, விக்கினேஸ்வரனும் கையெழுத்திடவில்லை, மலையக முஸ்லீம் கட்சிகளும் இதுவரை கையெழுத்திட்டதாகத் தெரியவில்லை. ஏன் எதிர் முகாமிலுள்ள சிங்களக் கட்சிகள் பலவும்; கூட இன்னமும் கையெழுத்திடவில்லை.
இந்நிலையில் தீவிர தமிழ்த்தேசியம் பேசும் முன்னணியினர் விழுந்தடித்துக்கொண்டு அதுவும் தாமாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்குச் சென்று கையெழுத்திட்டுள்ளனர்
தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் பிரேரணையில் கையொப்பமிட்டமையை சமூகவிஞ்ஞான ஆய்வுமையத்தினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அடுத்தடுத்து பல தவறுகளை விட்டிருக்கின்றது. அதில் முதலாவது ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்த பிரேரணையில் கையொப்பமிட்டமையாகும். வலுவான கலந்துரையாடல்களின் பின்னர் சிங்களத் தரப்பும், தமிழ்த் தரப்பும் இணைந்து தயாரித்த பிரேரணையில் தான் தமிழத்தரப்பு கையொப்பமிடலாமே தவிர சிங்களத்தரப்பு மட்டும் தயாரித்த பிரேரணையில் கையெழுத்திட முடியாது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி தங்களை கலந்தாலோசிக்காமல் பிரேரணை தயாரிக்கப்பட்டதால் கையெழுத்திட மறுத்துள்ளது. இரண்டாவது மிக முக்கியமானது நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் அமையப்போகும் புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகளை எடுக்கும் என்பது தொடர்பாக எழுத்து மூல உத்தரவாதம் அவசியமானதாகும். எழுத்துமூல உடன்படிக்கைகள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு கசப்பான அனுபவங்கள் இருப்பதனால் எழுத்துமூல உத்தரவாதத்திற்கு சர்வதேச சாட்சிகளும் அவசியமானதாகும்.
நிரந்தர அரசியல் தீர்வுக்கு காலஅவகாசம் தேவையாக இருப்பதனால் அதுவரும்வரை தமிழ் மக்களுக்கு இடைக்கால நிர்வாகம் ஒன்றை உடனடி கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். அதற்கு எழுத்துமூல உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த இடைக்கால நிர்வாகத்தை ஜனாதிபதியின் அதிகாரங்கள் மூலமோ அல்லது பாராளுமன்றச் சட்டத்தின் மூலமோ உருவாக்கலாம். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. எனவே தமிழ் மக்களின் நலன்களுக்கு சர்வதேச சாட்சிகளுடன் கூடிய எழுத்து மூல உத்தரவாதம் இல்லாமல் பிரேரணையில் கையொப்பமிட்டமை மாபெரும் தவறாகும்.
எனவே சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தினராகிய நாம் பின்வரும் கோரிக்கைகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடமும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளிடமும் முன்வைக்கின்றோம்.
பிரேரணை தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தாம் வைத்த கையொப்பங்களை உடனடியாக வாபஸ் பெறல் வேண்டும்.பிரேரணையில் கையொப்பமிடுவதற்கு முன்னர் சிங்களத் தரப்புக்கும், தமிழ்த் தரப்புக்குமிடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படல் வேண்டும். அதில் புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் உள்ளடக்கம், பொறுப்புக் கூறுதல், ஆக்கிரமிப்புப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரத்தில் நிலைமாறுகால நீதியை நடைமுறைப்படுத்துதல், காணிப்பறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வுகாணல், போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பேணல், என்பவை அவ் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும், அரசியல் தீர்வு நடைமுறைக்கு வருவதில் கால அவகாசம் தேவையாக இருப்பதனால் அதுவரை தமிழ் மக்களின் நலன்களை கவனிக்கவென இடைக்கால நிர்வாகம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இவ் இடைக்கால நிர்வாகமும் இவ் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படல் வேண்டும், சிங்களத் தரப்புடனான ஒப்பந்தங்கள் தொடர்பில் கசப்பான அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு இருப்பதனால் சர்வதேச சாட்சிகள் முன்னிலையிலேயே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும், ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடலாம். ஆனால் அந்தப் பிரேரணை தமிழ்த்தரப்பும், சிங்களத்தரப்பும் இணைந்து தயாரித்ததாக இருத்தல் வேண்டும், இந்த சமூக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சிங்கள மக்கள் முன்னெடுக்கும் கோத்தா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மக்களும் பங்காளிகளாக மாறலாம் என்றார்.