போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்பதே ஒரே வழி!
ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கமானது தனது மக்களைச் சரியான திசையில் வழிநடத்தி செல்லாது ஊழல்களும், கொள்ளைகளும் மலிந்த ஒரு நாடாக மாறி சிங்கள மக்கள் கூடி தெருக்களில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.
குறிப்பாக இன்று மலர்ந்திருக்கின்ற இந்த புத்தாண்டைக் கூட கொண்டாட முடியாத நிலையில் தெருக்களிலே இருக்கின்ற ஒரு நாடாக இலங்கை காணப்படுகிறது.
எரிபொருள், எரிவாயு, மின்சாரம், உணவுப் பொருட்கள் சரியாகக் கிடைக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அவர்களது கோரிக்கைகளுக்குச் சிறிதும் செவி சாய்க்காது மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல் மாறாகப் போராடும் மக்கள் மீது பொய்களை அவிழ்த்து விட்டு விடுவதில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதாவது தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு பட்டவர்கள் என்று கூறி அவர்களைத் திசை திருப்ப நினைக்கின்றது. நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு என்பது வடக்கு, கிழக்கு மலையக வாழ் நமது தமிழ் உறவுகளையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. நாளாந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அன்றாடம் உணவுப் பொருட்கள், பால்மா வகைகள், எரிபொருள், எரிவாயு என்பவற்றுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
கோட்டாபய அரசைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சிங்கள மக்களே கோரிக்கைகளை முன் வைக்கின்ற அளவுக்கு இன்றைய நிலைமை மாறி இருக்கிறது.
ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பில் இருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.
இல்லையேல் உலக நாடுகளில் இது போன்ற தலைவர்கள் இல்லாமல் போன வரலாறுகள் கட்டியம் கூறி நிற்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.