November 22, 2024

நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு! 16 பயணிகள் காயம்!

அமெரிக்கா நியூயார்க்கில் நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில்  நடத்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்தனர்.

புருக்ளின் நகர நிலக்கீழ் தொடருந்து நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலையில் பொது மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 

நிலக்கீழ் தொடருந்து நிலைய மேடைப் பகுதியில் புகை குண்டு  வீசிய முகமூடி அணிந்த நபர் திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்தினார். அவர் 33 தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

எனினும் எவரும் உயிரிழக்கவில்லை. 16 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 5போின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதல் நடத்தியவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தாக்குதல் நடத்தியவர் 62 வயதுடைய பிராங்க் ஜேம்ஸ் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், பிராங்க் ஆர்.ஜேம்ஸ் என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை என்று புலனாய்வாளர்கள் கூறினர்.

சந்தேகநபர் அமெரிக்காவை இனவெறி நாடாக குறை கூறி நிறைய காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

சந்தேகநபர் தொடர்பில் தகவல் வழங்கினால் 50 ஆயிரம் டொலர்கள் சன்மானம் வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகப்படும் நபர், ஒரு ஆரஞ்சு நிற ஆடை, அதன் மீது சாம்பல் நிற ஸ்வெட்ஷர்ட்  மற்றும் கட்டுமான ஹெல்மெட், அறுவை சிகிச்சை முகமூடியை அணிந்த  கருப்பு நிற ஆண் ஆவார் என்பன போன்ற விவரங்களை நியூயார்க் காவல்துறை வெளியிட்டுள்ளது.

ரெயில் நிலையத்தின் வெளியே கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த  யு-ஹால்  வாகனம் ஒன்றை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அது குற்றவாளி பயன்படுத்தியது என்பது தெரியவந்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert