November 21, 2024

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கக் கோரும் தமிழ்க கட்சிகள்

கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்கு கொண்டு வரவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி, அதற்கு பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச் செல்லவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஆறு கட்சிகள் கூட்டிணைந்து வலியுறுத்தியுள்ளன.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்றஉறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க.பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா ஆகியோரே இவ்வாறு கூட்டு வலியுறுத்தலைச் செய்துள்ளனர்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவு தனது வரலாற்றில் சந்தித்திராத பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் மக்களின் அன்றாட வாழ்வே ஸ்தம்பிதம் அடைந்து விடக் கூடிய ஆபத்தான நிலைமை காரணமாக மிகத் தீவிரமானதோர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சாதாரணப் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் தாமாகவே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், சுகாதாரத்துறையினர் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் உள்ளடங்கலாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியான தீர்வு கோரிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையை ஜனாதிபதியும் அரசாங்கமும் மற்றும் சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாண்டு, அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில் முழு நாடும் சீர்குலைந்து அராஜகம் தலைவிரித்து ஆடக் கூடிய மாபெரும் ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கின்றது.

தீ பரவுவதற்கு முன்னர் அதனைக் கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைப்பதற்கான நடவடிக்கைகளே இப்பொழுது உடனடியான தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். இந்த நெருக்கடி நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அடிப்படையான காரணம் தனி ஒரு மனிதரின் கையில் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையே என்பதில் பரந்துபட்டதும் தீவிரமானதுமான கருத்தோட்டம் எழுந்துள்ளது.

எனவே நிறைவேற்று அதிகாரத்தினை நீக்கி பாராளுமன்ற ஆட்சி முறைக்குச் செல்லும் வகையிலான செயற்பாடு இலங்கையின் தேசிய மட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இன்றைய நிலையில் பொறுப்புணர்வு மிக்கவர்களாக சகல அரசியல் தரப்புக்களும் செயற்பட்டு, இந்த முடிவுக்கு வந்து, அதனை நடைமுறைப் படுத்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதே நாடு எதிர்நோக்கி நிற்கும் மிகப்பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்குரூபவ் சரியான திசையில் எடுத்து வைக்கப்படும் முதலாவது அடியாக இருக்கும் என்பதையும் அழுத்திக் கூற விரும்புகின்றோம் என்றுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert