November 24, 2024

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தாலே பொருளாதாரம் கட்டி எழுப்பப்படும் – மணி

ஆட்சியாளர்களும் தென்னிலங்கை அரசியல் வாதிகளும் இனவாதத்தை கைவிட்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை  வழங்குவார்கள் என்றால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக  கொண்டு செல்ல முடியும் என யாழ் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

தற்போதைய சூழலில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட பல பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நெருக்கடிக்குள் நாம் வாழ்ந்து வருகின்றோம் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் 19 மற்றும்  உலக நாடுகளின் போர் என கூறினாலும் இந்த நாட்டினுடைய முறையற்ற பொருளாதார கொள்கை பிரதான  காரணமாகும். எது எவ்வாறு இருப்பினும்  பொருளாதாரம் சரிசெய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு  நாம் கூற விரும்புவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் முதலீடுகளை இங்கு கொண்டு வந்தால்  அதிலிருந்து நாட்டின்  பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். 

பலர் தயார் நிலையில் இருந்தாலும் மக்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களுடைய நீண்டகால கோரிக்கையான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். 

இனவாதத்தை ஆட்சியாளர்கள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கைவிட்டு இதய சுத்தியுடன் தமிழ்மக்களுக்கான உரிமையை வழங்க முன்வர வேண்டும்.

அவ்வாறு செய்தால்தான்  புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் முதலீடுகளை இங்கு கொண்டு வருவார்கள். அவர்கள் தங்கியுள்ள நாடுகளில் பொருளாதாரத்தில் பலமாகவே உள்ளார்கள்.  ஆட்சியாளர்கள் இனவாத சிந்தனையை கைவிட்டு தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் நாட்டின்  பொருளாதாரத்தை தடையின்றி மேற்கொள்ள முடியும். 

இந்த ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாடு நாடாக திரிந்து பிச்சை எடுப்பதை விட இந்த நாட்டுக்கு  உரித்தானவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களானால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக கட்டியேழுப்ப முடியும் என்றார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert