கொலை மிரட்டல் விடுத்து சமாதானமாம்!
இலங்கைப்பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்தவர்கள் மீது இலங்கை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது காயமடைந்தவர்களை கட்டாய சமாதானத்திற்கு வருமாறு காவல்துறை தலைமை அழைப்புவிடுத்துள்ளது.
போராட்ட சூழலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியாவை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பத்தை சேர்ந்த பெண்மணியொருவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டிற்கு படையெடுத்து சென்றிருந்த இலங்கை காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் தாக்குதல் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை விலக்கிக்கொள்ள தொடர்ச்சியாக மிரட்டிவந்துள்ளனர்
முறைப்பாட்டை விலக்கி சமாதானமாக செல்ல இலங்கை காவல்துறையால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையினை குறித்த குடும்ப அங்கத்தவர் ஏற்க மறுத்திருந்த நிலையில் அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக சிறைகளில் உள்ள அரசியல்கைதிகள் போன்று சிறைவாழ்க்கையினை அனுபவிக்கவேண்டுமெனவும் அவர் மிரட்டப்பட்டுள்ளனர்.அதேவேளை ஏற்கனவே காணாமல் போனது போன்று குடும்பத்திலுள்ள ஏனையவர்களும் காணாமல் போகவேண்டிவராலாமென்ற அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாக்குதல் தொடர்பிலான இலங்கை காவல்துறைக்கெதிரான வாக்குமூலத்தை விலக்கிக்கொள்வதாக கடிதத்தை பெற்று சமாதானமாகி சென்றுள்ளது இலங்கை காவல்துறை
தாக்குதலில் காயமடைந்த மற்றைய பெண்மணியான ஈஸ்வரி வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.