30:இருண்ட காலமல்ல:விடுதலை போராட்ட காலம்!
கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டது விடுதலைப்போராட்டமே.ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகள் பிரபாகரன் தலைமையில் போராடினார்.
அத்தகைய 30 வருட விடுதலைப்போராட்டத்திற்கான காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு அருகதை இல்லையென தெரிவித்துள்ளார் அகில இலங்கை மக்கள் எழுச்சிக்கட்சியின் தலைவரான அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்
யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துவெளியிட்ட அவர் 30வருடங்களாக உரிமைக்காக போராடிய நாங்கள் கௌரவமாக வாழ்ந்தோம்.ஆனால் அதனை இருண்ட யுகம் என்கிறார் மகிந்த.
உண்மையில் இருண்ட யுகமென்பது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை,கைகளை கட்டி பின்புறத்தால் சுட்டீர்களே அதுவே இருண்ட யுகம்.வகை தொகையற்று சரண் அடைந்தவர்களை காணாமல் ஆக்கியுள்ளீர்களே அதுவே இருண்ட யுகம்.
இப்போது அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு வெட்கமற்று ஒரு இலட்சம் தரப்போவதாக சொல்கிறீர்கள்.
நான் பகிரங்கமாக சவால்விடுகின்றேன்.தென்னிலங்கையை சேர்ந்த உங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்.நாங்கள் எத்தனைபேரோ அவ்வளவு பேருக்கும் இலட்சக்கணக்கில் உதவ தயார்.
உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோருவது தங்கள் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதையே.அவர்களை கொன்று புதைத்திருந்தால் எப்போது எங்கே கொன்று புதைத்தீர்கள்?எதற்காக கொன்று புதைத்தீர்கள் என்பதையாவது சொல்லிவிடுங்கள்.
தமிழ் மக்களது விடுதலைப்போராட்டம் நடந்த போதும் என்றுமே சிங்கள மக்களது பொருளாதார இலக்குகள் கைவைக்கப்படவில்லை.மூவின மக்களும் பொருளாதார ரீதியாக மேம்பட்டேயிருந்தனர்.
ஆனால் இன்றோ பஞ்சத்தை ராஜபக்சர்கள் கொண்டுவந்து அனைத்து மக்களையும் நடுவீதியில் நிறுத்தியிருக்கிறார்கள் என மேலும் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார்.