தனியே தன்னந்தனியே:டெலோ!
குருசாமி சுரேந்திரனின் வழிநடத்தலில் தனித்து டெலோவை முன்னநகர்த்த செல்வம் அடைக்கலநாதன் முற்பட்டுள்ளமை அண்மைக்காலமாக அம்பலமாகியுள்ளது.ராஜதந்திரிகள் முதல் தமிழக முதலமைச்சர் ஈறாக தனித்து சந்தித்து அலுவல் பார்க்க டெலோ முற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி, முதலில் இந்த நாட்டில் ஓர் இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அதனை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று தெரிவித்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும் வன்னி மாவட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதியின் சமிக்ஞை கிடைக்காதவரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி, கூட்டமைப்பினை அழைத்ததையொட்டி ஏற்கெனவே நாங்கள் சம்பந்தன் ஐயாவுக்கு ஒரு கடிதத்தினை அனுப்பியிருந்தோம். அது தொடர்பில் எமது கட்சியின் தலைமைக்குழு சனிக்கிழமை (19) மட்டக்களப்பில் கூடி சில தீர்மானங்களை எடுத்திருந்தது. எங்கள் கட்சியின் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் மற்றையது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆகியோரின் சிந்தனை இந்த நேரத்தில் எவ்வாறு இருந்திருக்கும் என்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தோம். அந்த அடிப்படையிலே அவர்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இந்தப் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்திருப்பார்கள்.
அந்த நிபந்தனை என்பது நல்லிணக்க அடிப்படையிலே சில விடயங்களை ஜனாதிபதி செய்ய வேண்டும் என்று நாங்கள் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
ஜனாதிபதி, இன்றுவரைக்கும் போரை நடத்தி முடித்தவர் என்ற பெருமிதத்தோடும் இறுமாப்போடும் சிங்கள மக்களின் வாக்குகளால் வந்தவர் என்கின்ற இனத்துவேசத்தோடும், இனப்பிரச்சினை இந்த நாட்டிலே இல்லை பெருளாதாரப் பிரச்சனை மாத்திரம் தான் இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுக்கு அழைக்கின்றார்.
வடக்கு, கிழக்கிலே இந்த அரசாங்கம் காணிகளைச் சூரையாடுகின்றது, புத்த சிலைகளை வைக்கின்றது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விலைபேசுகின்றது.
களவு கற்பழிப்பு செய்தவர்களை பொதுமன்னிபபு என்ற ரீதியில் விடுதலை செய்கின்ற இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு மேலாக சிறையிலே வாடுகின்ற அரசியல் கைதிகள் சம்மந்தமாக எந்தவொரு அக்கறையும் கொள்ளவில்லை.
இதற்குப் பின்னும் நாங்கள் இந்த ஜனாதிபதியோடு பேச வேண்டுமா? ஆகவே நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம். ஜனாதிபதி முதலில் இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அதனை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
நேற்றைய தினம் கூட யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை நிறுவுகின்ற செயற்பாடு நடைபெற்றது. இவ்வாறாக இந்த அரசாங்கம் இக்கட்டான நிலைமையில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலே நாங்கள் இந்த அரசைக் காப்பாற்றுகின்ற செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஜனாதிபதி ஒத்துக் கொள்ள வேண்டும். காணாமல் போனவர்களுக்கு விலைபேசாமல் அவர்களை ஒப்படைத்தவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கப்பட வேண்டும். உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக காசு தருவதாகச் சொல்வது ஏற்புடையதல்ல.
எமது இருப்பைக் கேள்விக்குறியாக்கக் கூடிய விதத்தில் எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. நிலம் இருந்தால் தான் அந்த இனம் செறிந்து வாழ முடியும்.
இந்த அரசாங்கத்தின் சிந்தனையின்படி ஒரு இனத்தின் நிலங்களை அபகரித்தால் அந்த இனத்தின் வாழ்வு கேள்விக்குறியாகும்.
அந்த வகையிலேயே மகாவலி, வனப் பாதுகாப்பு, பறவைகள் சரணாலயம், தொல்பொருள் திணைக்களம் என்ற திணைக்களங்கள் ஊடாக எமது பூர்வீகத்தை இல்லாதொழித்து இந்த நாட்டிலே வடக்கு, கிழக்கிலே பெரும்பான்மை இனம் சார்பாக பிரதிநிதித்துவம் வர வேண்டும் என்ற திட்டத்தோடு செயற்படுகின்றார்கள்.
எமது நிலம் எமக்கு முக்கியம். இந்த நிலத்துக்காகவே பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்திலே மடிந்திருக்கின்றார்கள். அவர்களின் போராட்டம் மலினப்படுத்தப்பட்டுவிடக் கூடாது.
எனவே எமது நிலத்தைத் தக்க வைத்து அடுத்த சந்ததி வாழ வேண்டும் என்று நினைத்த பொதுமக்கள், போராளிகளின் சிந்தனையை நாங்கள் சுமந்து செல்ல வேண்டும்.
அந்த வகையிலே இந்த நிலத்தை அபகரிக்கும் நிலைமைகளை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான சமிக்ஞையைக் காட்ட வேண்டும்.
மத ரீதயாக புத்த சிலைகளை வைக்கின்ற முறைமையை நிறுத்த வேண்டும். தமிழ்ப் பகுதிகளில் ஆதி காலத்தில் தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்தார்களே தவிர சிங்களவர்கள் அங்கு வாழவில்லை. பௌத்த மதம் என்பது சிங்களவர்களுக்கு உரித்தான மதம் அல்ல. அது பொதுவானது.
தற்போது தொல்பொருள் ஆராய்சி என்று வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் எங்கள் மக்களின் வரலாற்று நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இடங்களிலே சிங்கள ஆதிக்கத்தைச் செலுத்தி இந்த வரலாற்று இடங்களெல்லாம் சிங்கள தேசத்துக்குச் சொந்தமானது என்று சொல்லுகின்ற வகையிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை உனடியாக நிறுத்த வேண்டும் என்று தான் எங்கள் கோரிக்கை இருக்கின்றது.
எனவே எங்களுக்காகக் குரல் கொடுக்கின்ற நாடுகளினுடைய ஒட்டுமொத்தமான அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொடர்ந்து நாங்கள் பேசத் தயாராக இருக்கின்றோம் என்ற வாய்ப்பினை ஜனாதிபதி பெறப்போகின்றார்.
அவர் இனப்பிரச்சனை தொடர்பில் பேசப் போகின்றாரா? அல்லது பொருளாதார ரீதியில் பேசப்போகின்றாரா? எதை வைத்துக் கொண்டு அவர் பேச்சுக்கு அழைக்கின்றார் என்ற விடயம் ஜனாதிபதி செயலக நிகழ்ச்சி நிரலில் கூடச் சொல்லப்படவில்லை“ .